பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

மனிதன் இறை நெருக்கம் கொள்ள, மாபெரும் ராஜபாட்டையாக அமைந்திருப்பது அவனது மனிதத்தவமேயாகும்.

உலகை உரிய வழியில் திருத்தி சரியான இறைநெறியில் வழிநடத்த வந்த உத்தமர்களில் மனிதத்துவத்தை முன்னிருத்தி செயல்பட்டு வெற்றி பெற்றவர் நாயகத் திருமேனியாவார். மனித உணர்வை மதித்து, மனிதநேயத்தைப் போற்றி அன்பாலும் இனிய பண்பாலுமே மனிதகுலத்தை ஒன்றிணைக்க முடியும் என்பதை செயல்வடிவில் மெய்ப்பித்த பெருமையும் அண்ணலாருக்கே உண்டு.

இறை நெறியாகிய இஸ்லாத்தை முழுமைப்படுத்தும் மாபெரும் இறைப் பொறுப்பை ஏற்ற ஏந்தல் நபி, அதை வெற்றிகரமாக நிறைவேற்ற அன்பு, பண்பு, மனித நேயம், சகோதரத்துவம் ஆகிய உயர் தன்மைகளையே அதிகம் கையாண்டு வெற்றி பெற்றார். ஒரு மனிதன் தன்னொத்த மற்றொரு மனிதனை, அவன் எச்சமயத்தவனாயினும், அவனை எப்படி மதிக்க வேண்டும், எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை அதிகமதிகம் வலியுறுத்தினார். இதைத் தெளிவுபட எடுத்து விளக்கும் அரிய நிகழ்ச்சியொன்று பெருமானார் வாழ்வில் நடைபெற்றது.

அபூபக்ர் (ரலி) இஸ்லாத்தில் இணைந்து பெருமானாரின் வலக்கரமாக விளங்கிய நிலையிலும் அவரது துணைவியார் இஸ்லாத்தில் இணையாமல் சிலை வணக்கச் சமயத்திலேயே இருந்து வந்தார். இந்நிலையில் ஒரு நாள் தன் மகள் அஸ்மாவைக் காண சிறு அன்பளிப்புப் பொருளுடன் வந்தார். மாற்றுச் சமயத்தைச் சார்ந்த தன் தாயாரை இஸ்லாமிய விரோதியாகக் கருதிய அஸ்மா அவரை வீட்டிற்குள் நுழையவே அனுமதிக்கவில்லை. அவரை ஏறிட்டும் பார்க்க விரும்பாத அஸ்மா அவரது அன்பளிப்பையும் ஏற்க மறுத்துவிட்டார். இச்செய்தியை அறிந்த நபிகள்நாயகம் (சல்) அவர்கள் மிகவும் வேதனைப் பட்டார். உடனே அஸ்மாவை