பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

இஸ்லாத்தில் இணைந்தார். அவர் மட்டுமல்ல, இந் நிகழ்வுக்குப் பின் உள்ளார்ந்த நிலையில் மக்கா நகர மக்கள் அனைவரும் ஓர் இரவுக்குள் இஸ்லாமாயினர் என்பது வரலாறு.

அண்ணலார் அங்கு முஸ்லிமல்லாத மாற்றுச் சமயத்தவரிடம் நடந்து கொண்ட முறையைவிட, அத்தாப் இப்னு ஆசீத் அக்கணமே மனம் மாறி இஸ்லாத்தைத் தழுவியதை விட, நம் கவனத்தை ஈர்க்கும் செயல் அடுத்து நடை பெற்றது. அப்போது அண்ணலார் சிறிதும் தயங்காமல் அத்தாபை நோக்கி,

‘உங்களை மக்காவின் ஆளுநராக நியமித்துள்ளேன்’, என்ற பெருமானாரின் அறிவிப்பே அது. சிறிது நேரத்துக்கு முன்னர்வரை இஸ்லாத்தின் பரம விரோதியாக, நாயகத்தின் பெரும் பகையாளியாகத் திகழ்ந்த அத்தாப் இப்னு ஆசீத் மக்காவின் ஆளுநராக்கப்படுகிறார். அதுவும் இஸ்லாமிய ஆட்சியின் ஏகப் பிரதிநிதியாக புதிய ஆளுநர் நியமித்தபின் மதீனா போர் வீரர் யாருமே வெற்றி பெற்ற மக்காவில் தங்காமல் அனைவரும் மதீனா திரும்பினர்.

இதிலிருந்து பெருமானார் (சல்) அவர்கள் வெளி நாட்டினரிடம், பிற சமயத்தவரிடம் தன் மார்க்கத்தையோ அல்லது தனது இறைக் கொள்கைகளையோ அறவே ஏற்காதவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை மேற்கண்ட சம்பவம் மிகத் தெளிவாக எடுத்துக்கூறி விளக்குவதாக உள்ளது.

மனித நேயத்திற்கோர் மாநபி

இஸ்லாத்தின் இறைநெறிக்கிணங்க அண்ணலார் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அரசோச்சி நிற்கும் அரும் பெரும் குணப்பண்பு சமயங்கடந்த சகிப்புணர்வும் மனித நேயமுமாகும்.