பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

பெருமானார் விருந்துக்காக அழைத்து வந்த விருந்தாளிக்கு அவ்வுணவு வகைகளையெல்லாம் அன்போடு எடுத்துப் பரிமாறினார். அண்ணல் வீட்டைச் சேர்ந்தவர்களும் உண்ண வேண்டுமே என்ற எண்ணமேயில்லாது அனைத்து உணவு வகைகளையும் வயிறு முட்ட உண்டு தீர்த்தான். அவ்வாறு தின்று தீர்ப்பதன் மூலம் அவ்விரவு அவ்வீட்டார் அனைவரையும் பட்டினி போட வேண்டும் என்பது அத் துஷ்ட விருந்தாளியின் நோக்கமாக இருந்தது. அந்த அளவுக்கு மாற்றுச் சமயத்தைச்சார்ந்த அத்துவுடன் முஸ்லிம்கள் மீதும் பெருமானார் மீதும் வெறுப்பும் துவேஷ உணர்வும் கொண்டிருந்தான்.

விருந்து முடிந்தவுடன் ‘உண்ட களைப்புத் தீர’ உயர்தர படுக்கைகளை விரித்த பெருமானார் அதில் சுகமாக உரங்கி காலையில் செல்லுமாறு வேண்டினார். அவனும் அவ்வாறே அங்கே தங்கி உறங்கச் சென்றான்.

அளவுக்கதிகமாக இரவு உணவை உட்கொண்டதால் செரிமானக் கோளாறு ஏற்பட்டு, நள்ளிரவில் வாந்தியும், பேதியும் ஏற்பட்டது. இதனால் அவன் படுத்திருந்த விலையுயர்ந்த படுக்கை விரிப்புகளெல்லாம் அசுத்தமாகி விட்டது. இதனால் விடிவதற்கு முன்பாகவே எழுந்து யார் கண்ணிலும் படாமல் ஓட்டம் பிடித்தான்.

காலை விடிந்தவுடன் விருந்தாளியைக் காணவந்த பெருமானார் அவன் தங்கியிருந்த அறையும் படுக்கை விரிப்புகளும் அசுத்தமாகியிருப்பதைக் கண்டு, நிலையைப் புரிந்து கொண்டு, அறையைச் சுத்தப்படுத்தியதுடன் படுக்கை விரிப்புகளையும் தம் கைப்படத் துவைத்துச் சுத்தப்படுத்தலானார். அச்சமயம் தான் இரவு அவ்வறையில் மறந்து வைத்து விட்டுப் போன விளையுயர்ந்த வாளை எடுத்துச் செல்ல மீண்டும் அத் துஷ்ட விருந்தாளி அங்கு