பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

வந்து சேர்ந்தான். அப்போது அவன் அசுத்தப்படுத்திய படுக்கை விரிப்பை நாயகத் திருமேனி தன் கைப்படத் துவைத்துக் கொண்டிருப்பதைக் கண்டான். வேற்றுச் சமயத்தைச் சார்ந்த, மாறுபட்ட கொள்கை, கோட்பாடு களையுடைய அவ்வேற்று விருந்தாளியின் உள்ளம் நெக்குருகியது.

திரும்பிவந்த விருந்தாளியைக் கண்ட பெருமானார் ஆவலோடு ஒடிச் சென்று, அன்பு மொழி கூறி வரவேற்று அவன் மறந்து வைத்துவிட்டுப் போன வாளை எடுத்து வந்து கொடுத்ததுடன், அவன் உடல் நலனைப் பற்றி மிகவும் அன்போடும் பரிவோடும் கேட்டார். செரிமானக் கோளாறுக்கு மருந்தளிக்கவும் முனைந்தார். தான் நினைத்த தீங்குணர்வுக்கு நேர்மாறாக அன்பும் பரிவும் அரவணைப்பும் காட்டும் நாயகத் திருமேனியின் மனித நேயப் பண்பு, அந்த மாற்றுச் சமயத் துஷ்ட விருந்தாளியைக் கண்ணீர்விடச் செய்தது.

மதீனத்தவரிடையே ஐக்கிய ஒற்றுமை

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் பல்வேறு சமயங்களிடையே காட்டப்பட வேண்டிய சகிப்புணர்வின் மொத்த வடிவமாக வாழ்ந்து வழிகாட்டிச் சென்ற மனிதப் புனிதர் என்பதை அவரது வாழ்க்கை வரலாறு முழுமையும் விளக்குகிறது.

அவரது சமய சகிப்புணர்வின் ஒட்டுமொத்த முழு வெளிப்பாடாக அவரது மதீனா வாழ்க்கை அமைந்தது.

நாயகத் திருமேனி அவர்கள் மதீனமாநகர் வந்து சேர்ந்தபோது, அங்கே பல்வேறு வகைப்பட்ட இன, சமய சமூகத்தவர்கள் வாழ்ந்து வந்தனர். அங்கே ஒளஸ், கஸ்ரஜ் என்ற இரு அரபி இனத்தவர்களும் யூத இனத்தைச் சேர்ந்த