பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

பனீ நளீர்கள், பனூ குறைளாக்கல், பனீ கைனூக்சு என்ற பிரிவினர்களும் வாழ்ந்தனர். இவர்களோடு கிருஸ்தவர்கள், சிலை வழிபாடு செய்துவந்த சிறு சிறு சமயப் பிரிவினர்களும் மதீனாவில் வாழ்ந்து வந்தனர். இவர்களிடையே ஒற்றுமையோ ஒருங்கிணைந்த உணர்வோ இல்லாதிருந்தது. இனப் பிரிவும் மதப் பிரிவும் அவர்களிடையே பிணக்கையும் பிளவையும் ஏற்படுத்திக் கொண்டேயிருந்ததெனலாம்.

எப்போதாவது ஏதாவது காரணத்தால் இரு சமயத்தவர்களிடையே குழப்பம், சமயச் சச்சரவு, அதன் காரணமாகச் சண்டை ஏற்பட்டால் பெரும் பொருள் இழப்பும் உயிர்ச் சேதமும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமைந்து விடும். அப்போதெல்லாம் மற்ற சமயத்தவர்கள் ஒதுங்கி நடுநிலையாளர்களாக இருப்பர். இவ்வாறு ஒவ்வொரு சமயத்தவரும் மற்ற சமயத்தவரின் நலத்தைப் பற்றிக் கடுகளவும் கவலை கொள்ளாதிருப்பர். எல்லோரும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதில் அக்கறையோ ஆர்வமோ இருந்ததில்லை. இவ்வாறு கொட்டிய நெல்லிக் காய்களாகப் பிரிந்து வாழும் மதீனத்தவர் போக்கு படையெடுக்கும் வெளியாருக்கு நல் வாய்ப்பாக அமைய, அவர்கள் அடிக்கடி மதீனாமீது தாக்குதல் தொடுப்பர். அப்போது கொள்ளையிடுவதும் கொலை செய்வதும் வாடிக்கையான நிகழ்வுகளாக நடந்து வந்தன.

அன்றிருந்த சூழ்நிலையில் அராபிய இனச் சமூகத்தவர்களும் சிலை வணக்கச் சிறுசிறு சமயத்தவர்களும் இஸ்லாத்தை ஏற்றனரேயன்றி, யூத இனத்தவர் அன்றையச் சூழலில் இஸ்லாத்தைத் தழுவ விரும்பினாரில்லை.

இதற்கு ஒரு அடிப்படைக் காரணமும் இருந்தது. தங்கள் யூதத் திருமறை முன்னறிவிப்புச் செய்திருந்த ஒரு புதிய நபியை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். நபிகள்