பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

நாயகம் முஹம்மது (சல்) அவர்களே அந்நபி என யூத அறிஞர்களும் வேத விற்பன்னர்களும் கருதினும், புதிய நபி யூதர்களின் நலத்தை மட்டும் கருத்திற் கொண்டு செயல்படாது, பிற சமூகத்தவர் அனைவரையும் சகோதரராகக் கொண்டு செயல்படும் முறை அவர்கட்கு ஒருவித மனக்கிலேசத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருந்தது. ஆயினும், அவ்வுணர்வை வெளிக்காட்டிக் கொள்ளாது நாயகத் திருமேனியின் போக்குக்கு இயைபவர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டார்கள். அண்ணலார் இவ்வுணர்வுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக அங்குள்ள அனைத்து இனத்தவர்கட்கும் சமயத்தவர்கட்குமிடையே இணைப்பையும் பிணைப்பையும் ஏற்படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.

நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இந்நிலையை முற்றாக மாற்றியமைக்க முற்பட்டார் பெருமானார் அவர்கள். ஒரு தலைமையின்கீழ் அனைத்து இன, சமய, சமூக மக்களை ஒருங்கிணைக்கவும் சமய சகிப்புணர்வோடு ஒன்றுபட்ட நிலையில் செயல்படவுமான சூழலை உருவாக்க விழைந்தார். அதற்கான செயல்திட்டம் வகுத்துச் செயல்படுத்த முனைந்தார்.

உலகின் முதல் சர்வ சமய மாநாடு

மதீனாவிலுள்ள அனைத்து இனத் தலைவர்களையும் சமயக் குரவர்களையும் சமூகத் தலைவர்களையும் அழைத்து, கூட்டம் நடத்தினார். மதீனா நகரிலுள்ள பல்வேறு இன மக்களும் சமய மக்களும் பிளவுபட்டு, பிரிந்து நிற்பதால் விளையும் உள், வெளி பாதிப்புகளை எடுத்து விளக்கினார். வெளியார்கள் எளிதாகத் தாக்குதல் தொடுக்க ஒற்றுமையின்மை எவ்வாறு வாய்ப்பாக அமைகிறது என்பதை எடுத்து விளக்கினார்! இன சமய