பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வேறுபாடு கடந்த நிலையில் நகர மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே அமைப்பாக அமைவதன் மூலம் சிதறிக் கிடக்கும் மதீனத்தவர் சக்தி ஒருங்கு திரளவும், ஒன்றுபட்ட நிலையில் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவுமான சிறப்புமிகு நிலை உருவாகும். அப்போது வெளியார் நம்மைத் தாக்க அஞ்சுவர்; நமக்கு நாமே பாதுகாப்பு சக்தியாகவும் உருவாக முடியும்’, என்றெல்லாம் அறிவுரை கூறினார்.

எப்போதும் சண்டை, சச்சரவுகளால் மிகவும் துவண்டு போயிருந்த பல்வேறு இனத் தலைவர்களுக்கும் சமயத் தலைவர்களுக்கும் இந்த யோசனை மிகச் சிறந்த ஒன்றாகப் பட்டது. உடனடியாக அண்ணலாரின் ஆலோசனைக் கிணங்க நகர அரசு ஒன்றை அமைக்க ஒப்புதலளித்தனர். ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கி எல்லோரையும் ஒன்றுபடுத்த விழையும் பெருமானாரே தலைமை தாங்கி நகர அரசை அமைத்து இயக்குமாறு வேண்டினர். மதீனா நகர அரசுத் தலைவராக அண்ணாலரையே ஒரு மனதாக எல்லோரும் தேர்ந்தெடுத்தனர்.

இவ்வாறு மனிதகுல வரலாற்றிலேயே முதன் முதலாக சர்வ சமய சமரச மாநாட்டைக் கூட்டிய பெருமைக்குரியவராக அண்ணலார் அவர்கள் அமைகிறார். மாறுபட்ட இன, மத கோட்பாட்டாளர்களை ஒருங்கு திரட்டி அவர்கள் அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நிலையான நலனுக்கு வழி வகுத்த பெருமை பெருமானாரையே சாரும்.

மதீனா நகரின் வரலாற்றிலேயே முதன் முறையாக நகர ஆட்சி அமைப்பும் அதற்கு மக்களின் பிரதிநிதிகளால்