பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையும் அப்போது அமைவதாயிற்று: அதுவும் சமயங் கடந்த நிலையில்.

சமய சகிப்புணர்வை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நகர ஆட்சி அமைப்பு செவ்வனே நடைபெற அண்ணலாரின் தலைமையின்கீழ் எழுத்து பூர்வமான சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டன. எழுதப் படிக்கக் கற்காத ஏந்தல் நபியின் முனைப்பால் உருவாக்கப் பட்ட மதீன அரசமைப்புச் சட்டமே உலகில் எழுத்துருவில் உருவாக்கப்பட்ட முதல் சட்டம் என்று இன்றும் சட்ட வரலாறு சான்று கூறிக் கொண்டுள்ளது. இச்சட்டத் தொகுப்பு ஐம்பத்திரண்டு ஷரத்துகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இஸ்லாத்துக்கு முன்னதாக இருந்ததாகக் கூறப்படும் ரோமானிய, கிரேக்க, ஹிந்து, சீனச் சட்டங்கள் எதிலும் காண முடியாத, யாருடைய சிந்தனையிலும் முளைவிடாத அற்புதமான ஷரத்துக்களைக் கொண்ட சட்டத் தொகுப்பாக அது அமைந்துள்ளது.

அனைத்துச் சமயங்களுக்கும் அப்பாற்பட்ட நிலையில் நகர நலத்தையும் மக்களின் மேம்பாட்டையும் பற்றிய உணர்வுகள் மட்டும் அரசோச்சும் வகையில் அச்சட்டம் அமைந்துள்ளது. முஸ்லிம்கள் பேணி நடக்க இஸ்லாமிய நெறி; யூதர்கள் பின்பற்ற யூத சமயம்; கிருஸ்தவர்களை வழி நடத்த கிருஸ்தவ மதம்; அதேபோன்று அங்கிருந்த சிறு சிறு சமயத்தவர்கட்கும் சிலை வணக்கத்தவர்கட்கும் அவரவர் சமய நெறிமுறைகள் உண்டு. ஆனால், அச் சமயங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு, மனிதர்கள் என்ற முறையில் அனைவருக்கும் பொதுவான நலன்களை முன்னிலைப்படுத்திச் செயல்பட எவ்வித ஏற்பாடும் இருந்திருக்கவில்லை. இந்நிலையை அடியோடு மாற்ற

7