பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

"(நபியே!) உமக்கு முன்வந்த இறை தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ அதனையே யன்றி வேறொன்றும் உமக்குக் கூறப்படவில்லை.”

(திருக்குர்ஆன் 41:43)

என்ற இறைவசனம் இன்றும் இயம்பிக் கொண்டுள்ளது.

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு முன்னதாக வந்த இறைத் தூதர்களாகிய நபிமார்கள் எல்லோருமே ஆன்மீகம் பற்றித்தான் போதித்தார்கள். அகவாழ்வின் பல்வேறு கூறுகளின் வளர்ச்சிக்கான வழிவகைகளைப் பற்றித் தெளிவாகவும் திட்பமாகவும் கூறிப் போதித்தார்கள். ஏனெனில், அவர்கள் ஆன்மீகப் போதகர்களாகவே அனுப்பப்பட்டவர்கள். எனவே, அவர்களின் நோக்கும் போக்கும் ஆன்மீகத்தைப் போதிப்பதோடு அமைவதாயிற்று. ஆனால், நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பணி ஆன்மீகப் போதனையோடு அறிவியலையும் போதிப்பதாக அமைந்தது. தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஆன்மீக வாழ்வாகிய அக வாழ்க்கையையும் அறிவியல் சார்ந்த வாழ்வாகிய புற வாழ்க்கையையும் ஒரு சேர உணர்த்தியவர் பெருமானார் (சல்) அவர்களாவர். அதுவும் உளவியல் அடிப்படையில்.

அண்ணல் நபி ஓர் அழகிய முன் மாதிரி

மற்ற நபிமார்களெல்லாம் வெறும் போதகர்களாக விளங்கி, போதிப்பதையே தங்களின் தலையாய பணியாகக் கருதி செயலாற்றி மறைந்தார்கள்.

ஆனால், அண்ணலார் அவர்கள் போதிப்பதோடு, போதனைக்கேற்ப வாழ்ந்து காட்ட வேண்டிய கடப்பாடுடையவராகவும் இறைவனால் அனுப்பப்பட்டிருந்தார்கள். இதை,

“உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரில் அழகான முன்மாதிரி அமைந்திருக்கிறது.”

(திருக்குர்ஆன் 33:21)