பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

வல்ல அல்லாஹ்வின் அருட்கொடையாகும். அதிலும், வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அழகிய முன் மாதிரியாக வாழ்ந்து காட்டிய பெருமையும் பெருமானார்க்கே உண்டு.

பெருமானாரின் பெரு வாழ்வும் அதற்கு அச்சாணியாயமைந்த இஸ்லாமியத் திருமறையாம் திருக்குர்ஆனும் உணர்த்துவது இறை நம்பிக்கையும் இறை வணக்கமுமேயாகும். இறை நம்பிக்கையும் அதனைச் செயல் வடிவில் நிறைவேற்றும் வணக்கமும் தனி மனித உயர்வுக்கு எல்லா வகையிலும் வலிவும் வனப்பும் ஊட்டுவதாகவே அமைந்துள்ளது.

ஐம்பெரும் கடமைகளும் வணக்கமுறைகளேயாகும்

இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமும் ஐம்பெரும் கடமைகளைப் பேணி நடக்கப் பணிக்கிறது. கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளாக ஈமான் எனும் இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் புனிதப் பயணம் ஆகிய ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்றக் கட்டளையிடுகிறது. இந்த ஐம்பெரும் கடமைகளும் ஒருவகையில் இறை வணக்க முறைகளாகவே அமைந்துள்ளன. ஈமான் எனும் இறை நம்பிக்கை உணர்வால் நிகழ்த்தப்பெறும் இறை வணக்கமாகும். தொழுகை என்பது உடலாலும் உணர்வாலும் நிறைவேற்றப் படும் இறை வணக்கமாகும். 'நோன்பு’க் கடமை உடலால் நிகழ்த்தப் பெறும் இறை வணக்கமுறையாகும். ஜகாத் எனும் வறியோர் பங்களிப்புக் கடமை பொருளால் நிகழ்த்தப் பெறும் இறைவணக்கமாகும். ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையாகிய ஹஜ் கடமை உடலாலும் பொருளாலும் நிறைவேற்றப்படும் இறை வணக்க முறையாகும். இவ்வாறு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளும் இறைவணக்க முறைகளாகவே அமைந்துள்ளன.