பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

ஃபிர்அவ்ன் இறை நம்பிக்கை அறவே இல்லாத மன்னன். தன்னையே கடவுளாகப் பிரகடனப்படுத்திக் கொண்டதோடு, தன்னை கடவுளாக மக்கள் வணங்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தியவன். வணங்க மறுத்தவர்களை சிறையிலிட்டும், சித்திரவதை செய்தும் கொடுமைப்படுத்தி வந்த கொடுங்கோலன்.

மூஸா (அலை) ஃபிர்அவ்னைக் கடவுளாக வணங்க மறுத்ததோடு, உருவமிலா ஒரே இறைவனையே வணங்கப் பணித்தவர். ஃபிர்அவ்னுக்கெதிராக 'ஓர் இறை'க் கொள்கையை உரமாக மக்களிடையே பரப்பி வந்த மூஸா (அலை) அவர்களை ஃபிர்அவ்ன் கடும் பகைவராகக் கருதி, அவரை அழிக்க, அவரது ஓரிறைப் பிரச்சாரத்தை ஒடுக்க கடுமையான அடக்கு முறைகளைக் கையாண்டு துன்புறுத்தினான். அவனது கொடுங்கோன்மையை வெறுத்த மூசா (அலை) நாட்டை விட்டு வெளியேறி, தன் பிரச்சாரத்தைத் தொடர முற்பட்டார். ஓரிறைக் கொள்கையை ஏற்றுப் பின்பற்றுபவர்களை அழைத்துக்கொண்டு செங்கடலைக் கடக்க, அதனை நோக்கி நடந்தார்.

இதையறிந்த ஃபிர்அவ்ன் தன் படைகளோடு விரைந்து சென்று, மூசா (அலை) கூட்டத்தை தடுத்து நிறுத்தித் தாக்க புறப்பட்டான். செங்கடலை நெருங்கிய நிலையில் ஃபிர் அவ்ன் தன் படையுடன் தொடர்ந்து வருவதையறிந்த மூசா (அலை) தங்களைக் காக்குமாறு இறைவனிடம் வேண்டினார். இறைவன் செங்கடலைப் பிளக்கச் செய்தான். பிளவுண்ட செங்கடல் பாதை வழியே மூசா (அலை) மும் அவரைப் பின்பற்றி வந்தவர்களும் விரைவாக நடந்து சென்று மறு கரையை அடைந்தனர். அவர்களைப் பின்பற்றி வந்த ஃபிர்அவ்னும் அவன் படையினரும் நடுக் கடலை அடைந்தபோது, மூசா கூட்டத்தினர் அனைவரும் மறுகரையைச் சேர்ந்து விட்டனர். உடனே பிளவுண்ட கடல் ஒன்றிணைந்தது. இதனால் ஃபிர்அவ்னும் அவன்