பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

குறிப்பிடுவதன் மூலம் கைக்கூலி மனமுவந்து தரும் பொருள் அல்ல. ஒருவரது விருப்பத்துக்கு மாறாக, அவரிடமிருந்து வலியப் பிடுங்கும் கட்டாயமாகப் பற்றிப் பெறும் ஒன்றே என்பதை வலியுறுத்தவே 'பற்றித் தின்றவர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார் என்பது கைக்கூலியின் தீங்கை இன்னொரு வகையில் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாயுள்ளது.

உலகளாவிய சமுதாய சீர்திருத்த இயக்கமே இஸ்லாம்

இஸ்லாமிய மார்க்கம், அடிப்படையில் சமூகத் தீங்குகளை அகற்றி, சமூக விழிப்புக்கும் செழிப்புக்கும் இடையறாது பாடுபட்டு, இறைநெறியில் மக்களை வாழ வழிகாட்டும் இறை மார்க்கமாகும். சமூக ஒருங்கிணைவும் சமுதாய நல்லிணக்கமும் மக்களிடையே உருவாகி நிலைபெற, அன்புவழியை, இறைநெறியை நிலைபெறச் செய்ய இடையறாது பாடுபட்டு வரும் மார்க்கம் இஸ்லாம். இறைநெறியாகிய இஸ்லாத்தை, மக்களுள்ளம் ஏற்றுப் பின்பற்ற, அன்பு வழியைப் பேணப் பணிக்கிறது இஸ்லாம். இஸ்லாமியக் கருத்துகளை யாரிடத்தும் எக் காரணம் கொண்டும் எந்தச் சமயத்திலும் திணிப்பதையோ வலியுறுத்திப் பிரச்சாரம் செய்வதையோ இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை. இத்தகைய செயல்பாடுகள் இஸ்லாமியக் கோட்பாடுகட்கு நேர்மாறானவை எனக் கூறுகிறது.

"இஸ்லாத்தில் நிர்ப்பந்தமே இல்லை.”

(குர்ஆன் 2:256)

மேலும் திருமறை கூறுகிறது:

"(நபியே!) நீர் கூறும்: (முற்றிலும் உண்மையான) இவ்வேதமானது உம் இறைவனால் அருளப் பெற்றது. விரும்பியவர் (இதை) விசுவாசிக்கலாம், விரும்பாதவர் (இதை) நிராகரித்து விடலாம்.” (குர்ஆன் 18:29)