பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

நான் கல்லூரியில் வரலாற்றை குறிப்பாக இந்திய வரலாற்றையும் இஸ்லாமிய வரலாற்றையும் பாடமாக எடுத்துப் படித்தவன். அதிலும் புகழ் பெற்ற இஸ்லாமிய வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் சலாம் ஃபக்கி அவர்களிடம் வரலாற்றுப் பாடம் கற்றவன். இங்கு மட்டுமல்ல, எங்குமே இஸ்லாம் வாளால் பரப்பப்படவில்லை என்பதுதான் உண்மை.

தற்காப்புப் போரே இஸ்லாமியப் போர்

தனிப்பட்ட ஒரு முஸ்லிமுக்கும் பிற சமயத்தவர்க்கும் இடையே நடக்கும் சண்டையாக இருந்தாலும் சரி அல்லது ஒரு இஸ்லாமிய அரசுத் தலைவருக்கும் பிற சமய அரசுத் தலைவருக்குமிடையே நடைபெறும் போராக இருந்தாலும் சரி. சண்டையோ போரோ முதலில் தொடங்க ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாம் அனுமதி அளிக்கவில்லை. முதலில் கையை ஓங்கவோ வாளைத் தூக்கவோ கூடாது எனக் கட்டளையிடுகிறது.

தனிப்பட்ட தாக்குதலாக இருந்தாலும் அல்லது போராகவே இருந்தாலும் மற்றவர்கள் தாக்க முனையும் போது தற்காப்புக்காக எதிர்த்துப் போராடவே இஸ்லாம் அனுமதிக்கிறது. அம் முறையிலேயே இஸ்லாமியப் போர்கள் நடைபெற்றதாக வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது.

படைப்போர் இலக்கியம் புகட்டும் உண்மை

இஸ்லாமியப் போர்களைப் பற்றிய சுவையான தகவல்களின் கோவையாக இஸ்லாமியப் படைப்போர் இலக்கியங்கள் பல தமிழில் உண்டு. அவற்றின் தலைப்புப் பெயர்களெல்லாம் முஸ்லிமல்லாதவர்களின் பெயர்களாகவே அமைந்துள்ளன. சாதாரணமாகப் போரைத் தொடங்கி வீராவேசமாகப் போரிட்டு வெற்றி பெற்ற வீரர்களே இலக்கியக் கதாநாயகர்களாகப் போற்றப்படுவர். அவர்களின் பெயர்களே இலக்கியத் தலைவர்களாக இடம்