பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தூரம் வற்புறுத்திக் கூறியும், பெருமானார் (சல்) அவர்கள் காட்டிய வழி முறையைச் சுட்டிக்காட்டிச் சொன்ன போதும்கூட, அவற்றையெல்லாம் மீறி, மைதானம் சென்று தொழுது விட்டு வந்ததற்குக் காரணம். நாளைக்கு உங்களுக்கு ஒரு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பது தான் என் கவலை” எனக் கூறி சமாதானப்படுத்தினார் என்பது ஒரு வரலாற்றுச் சம்பவம். இவ்வாறு மனித நேய உணர்வோடு பிற சமயத்தவரை மதிக்க வேண்டும், அவர்கட்கும் அவர்தம் சமயத்திற்கும் அவர்தம் சொத்துக்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும்; அது ஒரு முஸ்லிமின் இன்றியமையாக் கடமை என்பதையும் இச்சம்பவங்கள் இன்றும் எடுத்து இயம்பிக் கொண்டுள்ளன.

உண்மைக்குப் புறம்பான பாப்ரி மஸ்ஜித் பிரச்சினை

இத்தகைய வரலாறுகளை அறியாத காரணத்தால் - நாமும் அவர்களை அறியச் செய்யாத காரணத்தினால் அயோத்தியை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தான் பகுதியிலே அயோத்தி இருந்ததாக ஒரு ஆதாரச் செய்தி; தாய்லாந்தில் பேங்காக் நகருக்கருகில் ஒரு அயோத்தி இருந்ததாக மற்றொரு ஆதாரச் செய்தி. இந் நிலையில் பாப்ரி மசூதிக்குள் ஒரிஜினல் அயோத்தி ராமன் பிறந்த இடம் இருப்பதாக ஒரு மாய்மாலம். நாம் அந்தப் பிரச்சினைக்குள் செல்ல வேண்டியதில்லை. அது தேவையற்ற பிரச்சினை. ஏதோ ஒரு கட்டிடத்தை இடித்ததினால் முஸ்லிம்களின் உள்ளத்தை வேண்டுமானால் புண்படுத்தலாம். அதனால் வேறு பெரும் பயன் ஏதும் ஏற்பட்டு விடப் போவதில்லை. இறைவன் பாப்ரி மசூதிக்குள் மட்டும் இருப்பவன் அல்ல. வல்ல அல்லாஹ் எங்கும் இருப்பவன். முஸ்லிம்களின் உணர்வுகளை ஊனப்படுத்த வேண்டும் என்பதற்காக இச் செயல்களை மேற்கொள்வதை நினைத்துத்தான் வேதனைப்படுகிறோம்.