பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

நெறிகளின்பால் கொள்ளும் பற்றாகும். இனப்பற்று என்பது வெறும் முஸ்லிம் என்பதற்காகக் கொள்ளும் பற்றாகும். இன்னும் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் பலரும் ஒரு முஸ்லிமுக்கு மகனாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால் முஸ்லிமாக வாழ்பவர்களே ஆவர். அவர்கட்கு மார்க்க அறிவோ பற்றோ அதிகம் இருப்பதில்லை. இத்தகைய இனப்பற்று சில சமயம் இன வெறியாகவும் உருவெடுத்து விடுகிறது. பற்றைப் பாராட்டும் இஸ்லாம் வெறியை அறவே வெறுக்கிறது. எந்தவொரு விஷயத்திலும் ஒரு முஸ்லிம் கொள்ளும் வெறித்தனமான போக்கு நபி வழியும் இல்லை; இஸ்லாமிய நெறி முறையும் இல்லை.

இனப் பற்று என்ற பெயரில் வெறித்தனமான போக்கை மேற்கொள்ளும் நிலை அன்றைக்கும் ஆங்காங்கே தலை தூக்கியிருக்க வேண்டும். அதனால்தான் ஒரு நபித் தோழராகிய சஹாபி “நாயகத் திருமேனியை நோக்கி, நம் இனத்தின் மீது பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?" என வினாத் தொடுத்தார். இவ்வினாவுக்கு விடைக் கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் “ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக் கொள்வது இயற்கை. அது பற்றாக மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது”.

இப்பதிலில் திருப்தியடையாத சஹாபி மேலும் தெளிவு பெறும் பொருட்டு, தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்.

"பற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறீர்கள். இனத்தின்மீது தீவிரமாகப் பற்றுக் கொண்டால் அதனை மற்றவர்கள் வெறியாகக் கருதுகிறார்கள். அந்தப் பற்றுக்கும் வெறிக்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டார்.