பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

149

வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் அடிப்படை குணமாக - அடித்தளப் பண்பாக ஒவ்வொரு முஸ்லிமும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற அருமையான கருத்தை மிகச் சிறந்த முறையில் பெருமானார் அவர்கள் நமக்கு நெறியாகக் காட்டியிருக்கிறார்கள். அறிவுரையாகச் சொல்லியிருக்கிறார்கள். கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் போக்கைத் திறம்பட உணர்த்தியிருக்கிறார்கள். இந்த நல்ல உணர்வுகளையும் சிந்தனைகளையும் பெருமானார் பிறந்த நாள் விழா நடைபெறும் இந்த நல்ல நாளிலே நம் நெஞ்சத்தில் தேக்கிக் கொண்டு செயல்பட வேண்டும்.

அது மட்டுமல்ல, இஸ்லாமிய நெறிகளுக்குப் புறம்பான எந்த உணர்வுகள் இருந்தாலும், எத்தகைய பழக்க வழக்கங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் விட்டொழிக்க வேண்டும். இந்தப் பழக்க வழக்கங்களெல்லாம் காலங்காலமாக இருந்து வருவதுதானே என காலத்தின்மீது பழியைப் போட்டு, அத் தவறுகளையே நாமும் தொடர வேண்டும் என்ற நொண்டிச் சமாதானங்களுக்கு அறவே இடம் தரக்கூடாது. இது இஸ்லாமிய நெறி, இது இஸ்லாத்துக்குப் புறம்பான செயல்: தவறான செயல் முறைகள் எதுவாக இருப்பினும் ‘சமுதாயப் பழக்கம்' என்ற பெயரால் யார் மேற்கொண்டாலும் நாங்கள் அதனை ஏற்க மாட்டோம் என்று ஒவ்வொருவரும் உள்ளத்தளவில் உறுதி எடுத்துச் செயல்பட வேண்டும். இன்று இஸ்லாமிய சமுதாயத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கக் கூடிய தீய உணர்வுகள், பழக்க வழக்கங்கள், சிந்தனைகள் அனைத்தும் மறைய வேண்டும். இஸ்லாமிய நெறிக்குப் புறம்பான போக்குகள் அனைத்தும் மாறுவதற்கும் அழிவதற்கும் மறைவதற்கும், தூசி தட்டி தவறுகளைக் களைவதற்கு ஏற்புடையதாக நம் செயல்பாடுகள் அமைய வேண்டும். அதற்கான மன வலிமையை அறிவாற்றலை - செயல் திறனை எல்லாம் வல்ல அல்லாஹ்,