பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159

அவர்கேட்ட விதம் எனக்கு மட்டுமல்லாது அங்கிருந்தவர்கட்கும் பிடிக்கவில்லை என்பதை அவர்கள் முகச் சுழிப்பு வெளிப்படுத்தி கொண்டிருந்தன. என்றாலும், எந்த உணர்வையும் வெளிக்காட்டிக் கொள்ளாது, அவரை நோக்கி நானும் சற்று உரத்த குரலில் "எந்த மொழியில் பேச வேண்டும்?” எனக் கேட்டேன்.

உடனே தலைவர் ஹாஜி சுலைமான் சாஹிப் எழுந்து “மணவை முஸ்தபா, தமிழில்தான் உரையாற்ற வேண்டும். அவரைத் தமிழில் பேசுவதற்காகத்தான், நம் கூட்டங்களுக்கு வராதவரை தந்திரமாக வரவழைத்துள்ளேன். அவர் தமிழில் உரையாற்றுவார்” எனக் கூறி பேசப் பணித்தார்.

நிலைமையை உணர்ந்த நான் “அல்லாஹ் பேசிய மொழியில் பேசுகிறேன்!” எனக் கூறி நிறுத்தினேன். நீதிபதி பஷீர் அஹமது உட்பட கூட்டத்தினர் அனைவரும் என்னையே நோக்கினர். சிறிது இடைவெளிக்குப் பிறகு 'மீண்டும் சொல்கிறேன். அல்லாஹ் பேசிய மொழியில் பேசுகிறேன்' எனக் கூறி நிறுத்தி, கூட்டத்தினரை நோட்டமிட்டேன். எல்லோரும் நெற்றியை உயர்த்தி வியப்போடு என்னை நோக்கினர். அல்லாஹ் பேசிய மொழி என்றால் அரபி தானே. அரபியில்தானே இறைவன் பெருமானார் மூலம் திருமறையை வழங்கியுள்ளான். ஆனால், அல்லாஹ் பேசிய மொழியில் பேசுகிறேன் என்று கூறிவிட்டு, தமிழில் பேசிக் கொண்டிருக்கிறாரே, இது என்ன வேடிக்கை!' என்றெல்லாம் அவர்கள் எண்ணுவதுபோல் முகபாவம். இருந்தது. இனியும் 'சஸ்பென்ஸ்' வைத்தால் அது 'சப்' பென்ஸாகி விடும் எனக் கருதி, தொடர்ந்து விளக்க முனைந்தேன்.

முதல்வேத மொழி தமிழ்

இஸ்லாமிய மரபுப்படி மக்களுக்கு இறைநெறி புகட்டி, நேர்வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட இறை

10