பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

கூடியவர்கள் தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். தங்களுடைய விருப்பு வெறுப்புகளை, எண்ணங்களை, சிந்தனைகளை, தங்களால் செயல்படுத்த இயலாதவைகளை தவிர்ப்பதற்கு காரண காரியங்களைத் தேடிக் கொண்டிருப்பவர்கள்தான் 'முஸ்லிம்கள்' என்ற பெயரில் மிக அதிகமாக இருந்து கொண்டு, தாங்கள் சொல்வதுதான் இஸ்லாம் என்ற முறையிலே எழுதி, பேசி வருகிறார்கள். ஒருவகையில் இவர்கள் இஸ்லாத்தைவிட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஏதோ ஒருவித வண்ணக்கண்ணாடி போட்டுக் கொண்டு, அதன் வழி பார்த்து, அப்படி பார்த்த மாத்திரத்திலே வண்ணக் கண்ணாடி வழியே தங்களுக்குத் தெரிகின்ற தோற்றத்தை மற்றவர்களுக்குச் சொல்வதிலே கவனம் செலுத்துகிறார்கள். ஆகவே, வண்ணப் பூச்சற்ற உண்மையான இஸ்லாத்தை - இறை நெறியை மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை - தேவை நமக்கு மட்டுமல்ல, மேனாட்டினருக்கும் இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்கள், சரியான கோணத்தில், சரியான விளக்கமுறைகளில் இன்றைக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு கசப்பான உண்மையாகும்.

கேட்பவர் உண்டு ; கொடுப்பவர் இல்லை !

அப்படி சரியான தகவல்களை சரியான முறையில் கூறினால் அதனை ஏற்றுப்போற்ற சகோதர சமயத்தவர்கள் தயங்குவதே இல்லை. இதனை நான் எத்தனையோ சம்பவங்கள் மூலம் உணர்ந்துள்ளேன். நான் ஒரு சிறு சம்பவத்தின் மூலம் இதனை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மீலாது விழாவையொட்டி, 'தினமணி' தலையங்கப் பகுதியில் வெளியிடுவதற்கென 'பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்' என்ற பெயரில் கட்டுரையொன்றை எழுதியனுப்பியிருந்தேன். அதன் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் அக்கட்டுரையைப்


2