பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

169

மனிதத்துவ உணர்வு மட்டுமே ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தில் எப்போதும் உயர்ந்து நிற்க வேண்டும் என்பது ஹஜ் கடமை உணர்த்தும் உண்மை. பொருள் வசதியும் உடல் வலுவும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்வில் ஒருமுறையேனும் ஹஜ் கடமையை நிறைவேற்றுகையில் நேரிடையாக இவ்வுண்மை உணர்ந்து தெளிய வேண்டும் என்பதுதான் இறைக் கட்டளை.

இராமலிங்க வள்ளலார் ஏற்ற இஹ்ராம் உடை

எளிமையின் முழுமையை வெளிப்படுத்தும் இதே எஹ் ராம் உடையைத்தான் கருணை வள்ளலாகப் போற்றப்படும் இராமலிங்க வள்ளலார் தம் வாழ்நாள் முழுமையும் அணிந்து காட்சித் தந்தார். அத்துடன் இறைவனை ஒளி வடிவாக (நூர்)க் கண்டு வணங்கி வந்தார். 'உலகின் ஒளியாக இறைவன் இருக்கிறான்' என்பது திருமறை தரும் அமுத மொழியாகும்.

ஏற்றமிகு எளிமைப் பண்பு

எல்லா வகையிலும் எளிமைக்கு ஏற்றம் தருவது இஸ்லாம். நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் எப்பக்கத்தைப் புரட்டினாலும் அங்கே நீக்கமற நிறைந்திருக்கும் பண்பு எளிமையாகும். எளிமை உணர்வு பொங்கும் உள்ளத்திலேதான் தன்னைப்போல் பிறரைக் காணும் மனித நேய உணர்வு பூத்துக் குலுங்க முடியும். மனித நேயத்தின் மறுஉருவாக வாழ்ந்தவர் பெருமானார் (சல்) அவர்கள்.

மனித நேயத்திற்கோர் மாநபி

கறுப்பர் இனத்தைச் சேர்ந்த பிலால் அடிமையாக வாழ்ந்தவர். கருத்த உடலும் தடித்த உதடுகளையும் கொண்டவர். தன் எசமானனால் ஒரு மிருகத்துக்கொப்பாக நடத்தப்பட்டவர். பெருமானாரின் ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு முஸ்லிமானவர். இதனால் தன்