பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

படித்திருக்கிறார். நான் கட்டுரையை மாலை ஐந்து மணிக்கு அனுப்பினேன். அதைப் படித்த அவர் இரவு ஒன்பது மணிக்கு என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அவர் முன்பு மத்திய அரசில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். நன்கு படித்த மேதை. ஒன்பது மணிக்குத் தொலைபேசியில் பேசும்போது என்னிடத்தில் சொன்னார். "உங்கள் கட்டுரையை இப்போதுதான் படித்து முடித்தேன். நீங்கள் வெறும் கட்டுரை எழுதவில்லை. என் மனதிலே இருந்த தூசிகளைத் துடைத்து எறிந்திருக்கிறீர்கள். பெருமானார் பிற சமயங்களைப் பற்றிக் கொண்டிருந்த கண்ணோட்டத்தை, அவர்கள் பிற சமயங்கள் மீது காட்டிய சமய நல்லிணக்கத் தகவல்களை சரியான முறையில் முன்பே மக்களுக்குத் தெரியப்படுத்தியிருந்தால், 'பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்' என்ற கட்டுரையிலே நீங்கள் ஆதாரபூர்வமாகக் கொடுத்திருக்கக்கூடிய செய்திகள் உரிய முறையிலே மக்களிடத்திலே கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டிருந்தால், இஸ்லாமியர்களைப் பற்றி ஹிந்துக்களும் மற்றவர்களும் கொண்டிருக்கும் மாசு படிந்த எண்ணங்கள், தவறான கருத்துகள், உணர்வுகள் எப்பொழுதோ துடைக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டுரையை நாளைக்கே வெளியிட விரும்புகிறேன். நீங்கள் வெறும் கட்டுரை எழுதியதாகக் கருதவில்லை. இன்றைய நிலையில் எது மக்களுக்கு இன்றியமையாத் தேவையோ அந்த சமூகப் பணியை ஆற்றியிருப்பதாகவே கருதுகிறேன். உங்கள் நல்ல முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என மூச்சு விடாமல் பேசி முடித்தார். என் கட்டுரை பற்றி அவர் கருத்துக் கூறிய பாங்கு எனக்குப் பெரு மகிழ்வளித்தது.

மறுநாளே கட்டுரை வெளி வந்தது. அதன் பிறகு அது தொடர்பான இன்னொரு சம்பவம் நிகழ்ந்தது.

கட்டுரை வெளியான சில நாட்களில் கட்டுரை பற்றி அபிப்பிராயம் கூறும் வாசகர்கள் கடிதங்கள் பல வெளி