பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

நடந்திருக்கிறீர்கள். எனவே, நீங்கள் அந்த யூதனிடம் சென்று, தங்களை முந்திக் செல்ல வேண்டும் என்பதற்காக வேகமாக நடந்து சென்றதற்காக வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறி மன்னிப்புப் பெற்றுவரப் பணித்தார்கள். அலி (ரலி) அவர்களும் அவ்வாறே மன்னிப்புப் பெற்று வந்தார் என்பது வரலாறு.

மனித நேய உணர்வின் வளர்ப்புப் பண்ணை

மனித நேய உணர்வுகளின் வளர்ப்புப் பண்ணையாக அமைவது பண்பட்ட உள்ளமும் மனப்பக்குவமுமாகும். ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இவைகளை உருவாக்கும் வழிமுறையின் செயல்பாடுகளே ஐம்பெருங் கடமைகள். ஆன்மிக அடிப்படையில் மட்டுமல்லாது உளவியல் அடிப்படையிலும் அறிவியல் அடிப்படையிலும் ஆராய்வோர் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

'ஈமான்' எனும் இறை நம்பிக்கை இதயத்தில் முளை விடுகிறபோதே அவன் மனிதத்வத்தை உணர்ந்து தெளியக் கூடியவனாக உருமாறத் தொடங்குகிறான். இறைவன் ஒருவனே; அவன் உருவ மற்றவன்;அவன் ஆணும் இல்லை, பெண்ணுமில்லை, அலியுமில்லை; அவன் யாராலும் பெறப்படவுமில்லை; அவன் யாரையும் பெறவுமில்லை என்ற உறுதி ஒருவனுடைய உள்ளத்தில் அழுத்தம் பெற அவன் உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் அழுக்குகள் எல்லாம் அகலத் தொடங்குகின்றன. மன மாசுகள் அகல இங்கே வாய்மை குடிகொள்கின்றது. இருளடர்ந்த வீட்டில் விளக்கேற்றினால் இவ்விருள் இருக்குமிடம் தெரியாமல் அகல, அங்கே வெளிச்சம் கோலோச்சுவது போல் இறை நம்பிக்கையால் நிரம்பிய உள்ளத்தில் தீய உணர்வுகள், சிந்தனைகள் மறைந்தொழிகின்றன. இறை நம்பிக்கை ஒருவித வைராக்கியத்தை அவனுள் தோற்றுவிக்கிறது என்றே சொல்ல வேண்டும்.