பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

நாமெல்லாம் வெப்ப தகிப்பினால் துடித்துப் போய்விட்டோம். அந்தச் சிறிது நேரத்தில் என் சிந்தனை அண்ணலார் இஸ்லாமிய தீபத்தைக் கையிலேந்திய அந்த நாட்களுக்குச் சென்றது. சிறிது நேர வெக்கையை அனல் தகிப்பைத் தாங்க முடியாது தவிக்கிறோமே இஸ்லாமியச் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க, தகிக்கும் வெயிலைத் தாங்கிக் கொண்டு, ஏச்சுக்கும் பேச்சுக்குமிடையே பிரச்சாரம் செய்தபோது பெருமானார் பட்ட வேதனை என் கண் முன்னே படமாக விரிந்தது. பொன்னைவிட மேம்பட்ட பொருளாகத் தண்ணீரைக் கருதிய மண்ணில், அனலைத் தவிர வேறு எந்த வசதியும் இல்லாத பாலைப்பகுதியில், இந்த இறைநெறியை நிலைநிறுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், பட்ட பாடுகள், அடைந்த வேதனைகள் இவற்றையெல்லாம் ஒரு கணம் என்னால் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்த அரைமணி நேர அசெளகரியத்தையே நம்மால் தாங்க முடியவில்லையே, அண்ணலார் தம் வாழ்நாள் முழுமையும் எப்படியெல்லாம் துன்பத்தைத் தாங்கியிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே உள்ளம் நடுங்குகிறது.

பூரிப்பூட்டும் பொது விழா

பெருமானார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள இங்கே பேரார்வப் பெருக்கோடு வந்து குழுமியிருக்கும் நீங்களெல்லாம் கடும் உழைப்பாளிகள். நாள் முழுதும் உழைத்த களைப்புத் தீர ஓய்வெடுக்கச் செல்லாமல் அண்ணலாரின் வாழ்வையும் வாக்கையும் செவிமடுக்க இங்கே வந்து, இப் புழுக்கத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் அறிவு வேட்கையைப் பாராட்டுகிறேன். தீனைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்தைப் போற்றுகிறேன்.

இந்த விழாவில் இன்னொரு சிறப்பையும் காண்கிறேன். கடும் உழைப்பாளிகள் நிரம்பிய இம் மீலாது