பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

முறை முத்தமிட்டார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள். அந்நாட்டுப்புற அரபியும் அண்ணலார் கையில் முத்தமிட்டவராக அங்கிருந்து அகன்றார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த நபித் தோழர்கட்கு அண்ணலார் நாட்டுப்புற அரபி கைக்கு முத்தமிட்ட செய்தி, புதியதாகவும் புதுமையாகவும் இருந்தது.

"நாங்களெல்லாம் முத்தமிட எத்தனையோ முறை உங்கள் கரத்தை பற்றியிருக்கிறோம். அப்போதெல்லாம் நீங்கள் சும்மா இருந்து விடுவீர்கள் நாங்கள் தான் முத்தம் கொடுப்பது வழக்கம். ஆனால், இன்று அந்த நாட்டுப்புற அரபி உங்கள் கையைப் பற்றியவுடன் அவர் கையில் மூன்று முறை மாறி மாறி மகிழ்வு பொங்க முத்தமிட்டீர்களே அதற்கு ஏதேனும் சிறப்புக் காரணம் உண்டா?” என்று கேட்டார்கள்.

அப்போது அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் சொன்னார்கள் :

“நீங்களெல்லாம் என் கையைப் பற்றுவீர்கள். அப்போது உங்கள் உள்ளங்கை பஞ்சுபோல் மிருதுவாக இருக்கும். அதைக் கொண்டு நீங்களெல்லாம் உழைக்காதவர்கள் என்பதைப் புரிந்து கொள்வேன். ஆனால், அந்த நாட்டுப்புற அரபி என் கையைப் பற்றியபோது முரடாக இருந்தது. அவரது உள்ளங்கையைத் தடவிப் பார்த்தேன். கரடு முரடாக காய்த்து இருந்தது. எந்த அளவுக்கு அவர் உழைத்திருந்தால் அவருடைய கை இந்த அளவுக்குக் காப்புக் காய்த்து முரடாகப்போயிருக்க முடியும் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்த்தபோது, உழைத்த கரத்தை முத்தமிடுவது, இறைவனுக்கு நான் செலுத்துகின்ற நன்றியாக, இறைவனுடைய புகழைப் பாடுவதாக எண்ணி அவர் கையை நான் முத்தமிட்டேன்” என்று கூறினார்கள் என்றால் உழைப்புக்குப் பெருமானார் அவர்கள் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் தந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.