பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

201

களில் ஒருவனாகத்தான் நான் இன்று உங்கள் முன் ஒரு உதாரணமாகவே நின்று கொண்டிருக்கிறேன்.


குடத்து விளக்கு துலக்கம் அடைய

பிறக்கும் ஒவ்வொருவரையும் இறைவன் அறிவுக் குறைபாடுடையவர்களாகப் படைப்பதில்லை. இறைவனின் ஆத்ம அம்சத்தைப் பெற்றவனாகப் பிறக்கும் ஒவ்வொருவரிடமும் அறிவாற்றலுக்கான கருவை உட்கொண்டே பிறக்கிறான். ஆனால், அவ்வறிவு குடத்துள் இட்ட விளக்குபோல் துலக்கமற்றதாக இருக்கிறது. வேறொரு முறையில் சொல்வதென்றால் கூர்மையிலா வாள் போல் அவன் மன உறையுள் பொதியப்பட்டுள்ளது. கல்விப் பயிற்சி எனும் சாணை அவ்வறிவாற்றலைக் கூர்மைப் படுத்துகிறது. இவ்வாறு கூர்மையடையும் அறிவு, சிந்தனையை வளர்க்கிறது. அறிவாற்றலும் சிந்தனைத் திறமும் பகுத்தறிவைக் கூர்மைப்படுத்துகிறது. இதன் மூலம் துலங்காததெல்லாம் துலக்கமாகிறது. புரியாததெல்லாம் புரிகிறது. இருட்டுக்குள் இருந்த உண்மைகளெல்லாம் வெளிச்சத்துக்கு வர, அவன் அகவாழ்வும் புறவாழ்வும் செப்பமடைகிறது; செழிப்படைகிறது.

நீரின் அளவே நிராம்பல்

பிற உயிரினங்களிலிருந்து நம்மை வேறுபடுத்துவது இப் பகுத்தறிவுதான். மற்ற உயிரினங்களுக்கு ஐந்து வகையிலான அறிவுத் தன்மைகளை அளித்த வல்ல அல்லாஹ், மனிதனுக்கு மட்டும் சிறப்பறிவாக பகுத்தறிவு எனும் ஆறாவது அறிவைக் கொடுத்துள்ளான். எதையும் பகுத்துப் பார்த்து உண்மைத் தன்மையை உணர்ந்து தெளியும் இந்தப் பகுத்தறிவை மேலும் மேலும் கூர்மைப் படுத்துவதுதான் கல்விப் பயிற்சி. நீரின் அளவே நிராம்பல் இருப்பதுபோல் ஒருவன் கல்விப் பயிற்சிக்கேற்ப அவன் பகுத்தறிவு அவன் வாழ்வின் வழிகாட்டுதலுக்குரிய ஒளி விளக்காக அமைய முடியும்.