பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202


மற்ற உயிரினங்களிலிருந்து மேம்பட்டவனாக மனிதனைக் காட்டும் அளவுகோலே, அவனுக்கு இறைவன் அளித்த பகுத்தறிவுதான் என்று கூறினேன் அல்லவா? அதைப் பற்றிச் சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் அதன் தனித்துவம் நமக்கு நன்கு விளங்கும்.

மனிதன் உலக உயிரினங்களில் பலமிக்கவனா என்றால் இல்லை. அவனைவிட உலகிலே மிகப் பலம் வாய்ந்த உயிரினம் யானையாகும். அதற்குள்ள உருவ அளவும் உடல் வலுவும் வேறு எந்தஉயிரினத்துக்கும் இல்லை. ஆனால் நோஞ்சானான ஒரு யானைப் பாகன், யானையின் கழுத்திலே - அதன் மத்தகத்திலே ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு, தன் இஷ்டப்படியெல்லாம் யானையை ஆட்டுவிக்கிறான். தன் கையில் ஒரு சிறிய குச்சி வடிவிலான அங்குசத்தை வைத்துக் கொண்டு, தான் ஏவுகின்ற வேலையையெல்லாம் செய்யச் செய்கிறான். அவன் விருப்பப்படியெல்லாம் அம் மாபெரும் மிருகம் ஒடியாடி வேலை செய்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? போதிய பலமில்லா மனிதனுக்கு பலமிகுந்த யானையை ஆட்டிப் படைக்கும் வல்லமையைத் தந்தது எது? அவன் பெற்றுள்ள புத்தி பலம் தான். யானையை ஆட்டிப் படைப்பதற்கான உத்தியைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, அதன்படி அதைச் செயல்படுத்தி, யானையை அடக்கி, தன் விருப்பம்போல் ஆட்டிப் படைக்கிறான்.

சிங்கம், புலிகளைவிட வலிமை மிக்கவனா மனிதன் என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. சிங்கமோ புலியோ ஓங்கி அறைந்ததென்றால் மனிதனின் பற்களெல்லாம் பொல பொலவென்று கொட்டி விடும். அவ்வளவு உடல் பலம் உள்ளவை. என்றாலும் அவைகளை சர்க்கசில் ஒரு சாட்டையைக் கையில் வைத்துக் கொண்டு ‘ரிங் மாஸ்டர்’ பல சிங்கம், புலிகளை ஒரே நேரத்தில் தன் இஷ்டப்படியெல்லாம் ஆட்டிப் படைக்க