பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204


மிகவும் உணர்ந்ததோடு, அதனைச் செயல்படுத்திக் காட்டியவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களாவர். தான் எழுதப் படிக்கக் கற்காத ‘உம்மியாக நபி’ இருந்தபோதிலும் கல்வியின் பெரும் பயனை இவரளவுக்கு உணர்த்தியவரை வரலாற்றில் காண்பதரிது.

சிந்தனை ஊற்றுக்கண்

அது மட்டுமல்ல, இறைமறையாகிய திருமறை

“........ ஒரு சமுதாயம் (நல்லறிவாலும் நற்செய்கையாலும்)
தன்னை மாற்றிக் கொள்ளாதவரை இறைவனும்
அதனை நல்லருளால் மாற்றி விடுவதில்லை.”(13:11)

என உறுதிப்படக் கூறுவதிலிருந்து மனித வாழ்வின் உயர்வுக்கு, நலம் பயக்கும் நற் சிந்தனைகளுக்கு, அதன் வழிப்பட்ட அருஞ்செயல்களுக்கு உர மூட்டும் உந்து சக்தியாக, பெருகி வரும் ஆற்றல்களுக்கு ஊற்றுக் கண்ணாக கல்வியே அமைய இயலும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெள்ளத் தெளிவாகிறது.

அன்றைய சமுதாயச் சூழலில் போரில் தோல்வியுற்று போர்க் கைதிகளாகப் பிடிபடுபவர்கள் விடுதலை பெற வேண்டுமெனில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிணையத் தொகையாகத் தந்தால் விடுதலை பெற முடியும். இதுவே அக்காலத்திய நிலை. ஆனால், கல்வியின் முதன்மைத் தன்மையை நன்குணர்ந்த நாயகத் திருமேனி, போரில் சிறைப்படும் கைதிகளில் கற்றவர் யாரேனும் இருந்தால் அவர் பிணைத் தொகை தந்து விடுதலை பெறாமல், கல்வியறிவு பெறாத குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கு ஒரு குறிப்பிட்ட காலம் கல்வி கற்பித்தால் போதும், அவர் பிணைத் தொகை கட்டாமலேயே விடுதலை பெற முடியும் என்ற புது முறையைப் புகுத்தினார்கள் என்றால், கல்வியறிவின் இன்றியமையாத் தேவை எத்தகையது என்பதை இச்செயல் மூலம் அற்புதமாகப் புலப்படுத்தினார்கள் பெருமானார்.