பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214


புரட்சி முழக்கங்கள் முழங்கப்படுகிறது. பெண்களைத் தட்டி எழுப்ப, பாரதி எப்படியெல்லாம் முயன்றுள்ளார் என்பதைக் கண்டு பேருவகையடைகிறோம்.

ஆனால், இஸ்லாத்தைப் பொறுத்தவரை 1400 ஆண்டுகட்கு முன்பே ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமான நிலையில் வாழும் வழி வகுக்கப்பட்டு விட்டது. ஆணும் பெண்ணும் ஒரே ஆன்மாவிலிருந்து உருவானவர்கள். பெண்ணுக்கு ஆன்மாவும் உண்டு. அறிவும் உண்டு; ஆற்றலும் உண்டு. சொல், செயல், வீரம், விவேகம் எதிலும் பெண் ஆணுக்குப் பின் தங்கியவளல்ல என்பதை உலகுக்கு உணர்த்திய மார்க்கம் இஸ்லாம்.

இந்தச் சமயத்தில் நான் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டியது என் கடமை எனக் கருதுகிறேன். நாணயத்தின் இருபக்கமென ஆணையும் பெண்ணையும் உருவகித்து நாயகத் திருமேனி பேசிய காலகட்டத்தின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பெண்களை பிண்டப் பொருளாகக் கருதிய காலம். பெண்கள் கடுகளவு மரியாதையும் இல்லாமல் மிகக் கேவலமாக நடத்தப்பட்ட காலம். பெண் குழந்தை பிறந்துவிட்டதென்றால் அதை உடனே உயிரோடு புதைத்து மண்ணுக்கு இரையாக்கிவந்த காலம். வாலிபப் பெண்களைப் பந்தயப் பொருள்களாகக் கருதிச் சூதாட்டக் களத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட காலம். உலகிலேயே மிக இழிவான பிறவி பெண்கள் என்ற எண்ணம் எல்லோரிடமும் அரசோச்சி வந்த கால கட்டம்.

இத்தகைய காலச் சூழலிலேதான் ஏந்தல் நபி (சல்) விண் முட்ட பெண்ணின் பெருமையைப் பேசியதோடு, செயல் வடிவில் பெண்களின் பெருமையை, மதிப்பை, மரியாதையை நிலை நாட்டினார். 'சொர்க்கம் எங்கே இருக்கிறது?’ என வினா தொடுத்தவருக்கு 'உன் தாயின் காலடியிலே சொர்க்கம் இருக்கிறது’ என பதில் கூறி, பெண்ணின் பெருமைக்கு முரசு கொட்டியவர் பெருமானார் (சல்) அவர்கள்.