பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தவறான எண்ணங்கள் அழுத்தம் பெறச் செய்யப்பட்டது. இன்றும் தொய்வில்லாமல் அக்காரியம் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.

எனினும், இன்றைய விஞ்ஞான யுகத்தில், அறிவுலகம் விழித்துக் கொண்ட நிலையில், பழைய போக்குகள் கதிரவனைக் கண்ட பனிபோல் மறைந்து வருகின்றன. அதனை விரைவுப்படுத்தும் வகையில் அறிவுலகம் தன் செயல்பாடுகளை உருவாக்கிக்கொண்டு வருவது நமக்கெல்லாம் மகிழ்வூட்டும் செய்தியாக உள்ளது.

இவ்வாறு அறிவுலகில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய எழுச்சியின் காரணமாக இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மைச் சிந்தனைகள், கருத்துகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் உலகெங்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட முயற்சியில் அண்மையில் பி.பி.சி. தொலைக்காட்சி ஈடுபட்டது. 'Islam Faith and Power' எனும் பெயரில் ரோஜர் ஹார்டி என்பவரைக் கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்நிகழச்சிக்காக ரோஜர் ஹார்டி உலகம் முழுவதும் பயணம் செய்தார். இஸ்லாமிய அறிஞர்கள் பலரையும் சந்தித்து உரையாடினார். இஸ்லாமிய எதிர்ப்புணர்வு கொண்டவர்களையும் கண்டு பேசினார். முஸ்லிம், முஸ்லிமல்லாத பொதுமக்களையும் பேட்டி கண்டார். தான் சந்தித்து உரையாடிய பலதரப்பட்ட மக்களின் நாடி, நரம்புகளையெல்லாம் தொட்டுப் பார்த்தார். நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்தது. நிகழ்ச்சியின் இறுதியிலே அவருள் ஒரு உணர்வு அழுத்தமாகப் பதிந்தது. அதுதான் 'உலகிலேயே மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்' என்ற உணர்வு. இதை வெளிப்படையாக நிகழ்ச்சியின் இறுதியில் வெளிப்படுத்தவும் செய்தார்.