பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218


உங்களில் யாரும் கருதிவிட வேண்டாம். இந்தியப் பல்கலைக் கழகங்கள் குறிப்பாக தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்கள் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு அத்தகைய வாய்ப்பை நல்கும் வகையில் தங்கள் அஞ்சல் வழிக் கல்வியை விரிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. இதன் மூலம் இருந்த இடத்தில் இருந்தவாறே தேர்வு எழுதி வெற்றி பெற்று பட்டங்களையும் அதன் மூலம் உயர் பதவிகளையும் எளிதாகப் பெற முடியும்.

கல்வி மூலம்தான் வாழ்வில் கரையேற, உயர்நிலை பெற முடியும் என்பதில் உறுதி கொண்டு, ஊரில் உள்ள நம் வீடுகளில் உள்ள படிக்கும் வயதுள்ள தம்பி தங்கைகளை, அண்ணன், அக்காள்களை தவறாமல் படிக்க உங்கள் ஊதியத்தின் பெரும் பகுதியைச் செலவிடுங்கள். உங்கள் வருவாயின் முதல் செலவு கல்விச் செலவாக இருக்கட்டும். வெறும் பணச்சேமிப்பு உங்கள் குடும்பத்திற்குப் பாதுகாப்பாக அமைவதைவிட நீங்கள் அளிக்கும் கல்விதான் அவர்களுக்கு உண்மையான பாதுகாப்பாக அமைய முடியும். இதை உணர்ந்து செயல்படுபவர்கள் நம் குடும்பங்களிலே மிகமிகக் குறைவாகவே இருக்கிறார்கள். பாலைவனத் தணலிலே புழுங்கிச் சம்பாதித்து அனுப்பும் பணத்தைப் படாடோபமாகச் செலவிட்டு, தங்கள் வள வாழ்வைப் பிறருக்குப் பகட்டாகக் காட்டுவதில் செலுத்துகின்ற கவனத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட, இளம் சிட்டுகளின் கல்வி வளர்ச்சியிலே காட்டுவதில்லை. எட்டாம் வகுப்பை எட்டுவதற்கு முன்பே அரபு நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் வேலை தேடி அனுப்புவதிலே அதிகக் கவனம் செலுத்துகிறோம். போதிய கல்வி பெற்றால் அதிக வருமானம் தரவல்ல பணியில் அமரவும் அதிக உடல் உழைப்பு இல்லாமல் மன உழைப்பை மட்டும் செலவிட்டு, வளமாகவும் வசதியாகவும் வாழலாமே என்ற எண்ணம் நம்மிடத்திலே அழுத்தம் பெற வேண்டும். மனிதப் புனிதர் மாநபி (சல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் நினைவு