பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

இவ்வாறு இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளத்தக்க வகையில், தவறான கருத்துகள் பலவற்றை இஸ்லாத்தின் பெயரால் பரப்பப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. இவைகளை விவரம் புரியாத நம்மவர்களும், இஸ்லாமிய அறிவுக்குறைவால் மறுதளிக்கத் தவறியதன் காரணமாக, அத்தவறுகள் உண்மை எனும் போர்வையில் மக்களிடையே நிலைபெறுவது தவிர்க்க முடியாததாகியது. இத்தகு போக்குகளை மாற்றவும் உண்மைக் கருத்துகளும் இஸ்லாமியச் சிந்தனைகளும் மக்களிடையே நிலை பெறவும் இத்தகைய மீலாது விழாக்கள் கட்டாயத் தேவையாக அமைந்து வருகின்றன. பெருமானார் (சல்) அவர்களின் வாழ்க்கை வழி - அவர் வகுத்தளித்து முறைப்படுத்திய இறைநெறிகளை உரிய முறையில் இனங்கண்டு தெளிவு பெற இத்தகைய விழாக்கள் இன்றியமையாத் தேவை என்பதைக் கூற வேண்டியதில்லை.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு

நீங்கள் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இறைவனால் உலக மக்களுக்கு நேர்வழிகாட்ட அனுப்பப்பட்ட இறுதித் தூதர். அவர் மூலம் மனித குலத்துக்கு இறைநெறி புகட்டும் இறுதி வேதம் திருமறையாகிய திருக்குர்ஆன். இதன் மூலம் இனி, இறைத்தூதரோ இறைவேதமோ உலக மக்களுக்கு வரப்போவதில்லை. இறுதித்தூதர், இறுதி வேதம் என்றால் எக்காலத்திலும் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்துக்கும் தக்க தீர்வு வழங்க வேண்டும். இதன் நேற்று - இன்று - நாளை என முக்காலத்துப் பிரச்சினைகளுக்கும் முழுமையான தீர்வை பெருமானாரின் வாழ்விலும் திருமறையிலும் தேடிப் பெற வேண்டிய கட்டாய நிலை.

தனி மனிதனும் சமுதாய மனிதனும்

இந்த உலகிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் இரு பெரும் பிரிவுகளாகத்தான் பிரிக்க முடியும். ஒன்று