பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244


வனுக்கு நன்றி செலுத்துவதுதான் மனிதப் பிறப்பின் தலையாய கடமை. ஏனெனில், மனிதனுக்குத் தேவைப்படும் அனைத்தையும் படைத்தளித்துள்ள இறைவன், அவற்றை உரிய முறையில் துய்க்க, பகுத்தறிவையும் கொடுத்துள்ளான். எனவே, அனைத்தையும் அளித்த இறைவனுக்கு உள்ளத்தாலும் உடலாலும் இறைவணக்கம் புரிந்து நன்றி கூறுவது இன்றியமையாக் கடமையாகும்.

இதையே தமிழ்நாட்டுச்சித்தர்களும் தமிழ் பாடல்கள் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். “நட்டக் கல்லைத் தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே சுற்றி வந்து மெண மொணத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா, நட்டக் கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில், சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?” என்று அழகாகப் பாடியுள்ளார் பத்திரகிரியார். மொத்தத்தில் சித்தர் பாடல்களை எடுத்துக் கொண்டால் உருவ வழிபாட்டிற்கு எதிரான கருத்துகளையே கூறிச் சென்றுள்ளார்கள். ஒரே இறைவன் என்பதையும் உலக மக்களெல்லாம் ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள்; சகோதரர்கள் என்றும் அவர்களுள் வேறுபாடுகளேதும் காட்டுதல் கூடாது என்ற உணர்வை மக்கள் உள்ளத்தில் அழுந்தப் பதிக்க முயன்றவர்கள் சித்தர்கள். இவ்வுணர்வுகளெல்லாம் தமிழ் மண்ணிலே அழுந்தக் காலூன்றக் காரணமாயமைந்தவர்கள் வலிமார்களும் சூஃபிமார்களுமாவர்.

சூஃபிமார்கள் என்றழைக்கப்படும் இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் செல்வர்களும் வலிமார்கள் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர்களும் பக்தி இயக்கத் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். இவ்வியக்கத்தை மதங் கடந்த நிலையில் மெய்ஞ்ஞானச்செல்வர்களாகப் பார்த்ததனால்தான் தமிழ்ச் சித்தர்களிலே மிகச் சிறந்த சிந்தனையாளர்களாகப் போற்றப்படும் பதினெண் சித்தர்களில் மூவர் முஸ்லிம் சூஃபிக்கவிஞர்களாக இணைக்கப்பட்டு போற்றப்பட்டனர்.