பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248



களும் கூட, இச் சொல்லைத் தவறான பொருள் தொனிப்பில் பயன்படுத்துவதன் விளைவாக இஸ்லாம் மாசுபடுத்தப்படுகிறது. அதன் உண்மைப் பொருள்தான் என்ன?

'ஜிஹாது’ என்பதற்கு இறைவழியில் போராடுவது என்பது பொருளாகும். ஜிஹாது என்பது இருவகைப்படும். ஒன்று 'ஜிஹாதுல் அஸ்கர்’ என்பது. மற்றொன்று 'ஜிஹாதுல் அக்பர்’ என்பதாகும். இரண்டும் வெவ்வேறு நிலைகளில் அமைந்து செயல்படுவனவாகும்.

ஜிஹாதுல் அஸ்கர்

ஒரு முஸ்லிம் தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது தங்கள் உடைமைகளுக்கோ ஆபத்து ஏற்படும்போது அதைத் தடுக்க, எதிர்த்துப் போராட முயல்வது அவனது இன்றியமையாக் கடமையாகும். இத்தகைய தற்காப்பு முயற்சி அல்லது தற்காப்புப் போரே இஸ்லாத்தில் 'ஜிஹாதுல் அஸ்கர்’ என அழைக்கப்படுகிறது. 'உன்னை எதிர்த்துப் போராடுபவர்களைத் தற்காப்பு நிமித்தம் எதிர்த்து அல்லாஹ்வுக்காகப் போரிடு. ஆனால், அவர்களை முதலில் தாக்கி விடாதே. ஏனெனில், ஆக்கிரமிப்பாளர்களை இறைவன் அறவே விரும்புவதில்லை’ என்பது இறைநெறியாகும். எவ்வளவு அற்புதமான கருத்து.

எக்காரணம் கொண்டும், நான் உங்களை அடித்து விடக் கூடாது. நீங்கள் என்னை அடிக்க வந்தால் உங்களை எதிர்த்து தாக்கத்தான் அனுமதி உண்டே தவிர, ஒரு முஸ்லிம் எடுத்த எடுப்பில் யாரையும் அடிப்பதற்கோ, எந்த ஒரு நாட்டையும் தாக்குவதற்கோ எந்த ஒரு இனத்தையும் பாதிப்புக்குள்ளாக்குவதற்கோ எந்த உரிமையும் இல்லை. அப்படிச் செய்யக் கூடியவர்களை இறைவன் விரும்புவதும் இல்லை. அவர்களை வெறுத்து ஒதுக்கி வைத்து விடுகிறான். இதுவே திருமறையின் வாக்கமுதாகும். மொத்தத்தில் தற்காப்புக்காகப் போராடப் பணிப்பதே ஜிஹாதுல் அஸ்கர் ஆகும்.