பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

கற்களையெல்லாம் தூக்கியெறிந்து அவற்றையெல்லாம் அழித்துவிடு. அதுதான் உண்மையான மரணம். அதற்கப் புறம்தான் இறைவனிடம் நேராகப் போக வேண்டிய பாதையை நீ தேடிக் கொள்ள முடியும். இதுதான் சூஃபிமார்களாகிய இஸ்லாமிய மெய்ஞ்ஞானிகள் அனைவரும் கண்டறிந்து பாராட்டிய பாதை.

இதையேதான் வான்புகழ் வள்ளுவரும்,

"உரனெனும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரனெனும் வைப்பிற்கோர் வித்து"

எனக் கூறி அறிவுறுத்துகிறார்.

"அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை யாறொருவர் அடக்கி ஆள்கிறாரோ அவர் அறிவுக்கு வித்துப் போன்றோர் ஆவார்," என்பது அவர்தம் கருத்தாகும்.

புலனடக்கம் என்பது அவ்வளவு எளிதான காரியம் அன்று. எல்லோராலும் இயலக்கூடிய செயல் அல்ல. மனிதனின் ஐம்புலன்கள் மனிதனையே ஆட்டி வைப்பவையாகும். அவற்றின் அட்டகாசப் போக்கால் மனிதன் எளிதாகத் தன் ஐம்புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான். அதன்பின் எல்லாவிதமான, தீயுணர்வுகள், தீச் சிந்தனைகளும், தீக் குணங்களும் எளிதாக அவனுள்ளே புகுந்து அவன் மனத்தையே நஞ்சாக்கி விடுகின்றன. ஆனால், இவ்வைம்புலன்களையும் நம் வயப்படுத்தினோமானால் நம் உள்ளத்துள் மாறுபாடான உணர்வோ சிந்தனையோ அறவே தலைதூக்க இயலாமல் போய்விடும். இன்னும் சொல்லப்போனால் அனைத்து மனக்கதவுகளும் அடைபட்டுப் போகும். அதன்பின் நம் உள்ளம் இறையுணர்வோடு ஒன்றி, நம்மை சரியான வழித்தடத்தில் பீடுநடை போட பெருந்துணையாயமையும்.