பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

அரிட்ஸ்டாடில், பித்தகோரஸ் போன்ற கிரேக்கர்களும் யூக்ளிடு, தாலமி போன்ற எகிப்திய, அலெக்ஸாண்டிரிய அறிஞர்களும் கொள்கை வடிவம் தர, அவற்றையெல்லாம் அரபி மொழியில் பெயர்த்த முஸ்லிம்கள், அத்தனை அறிவியல் துறைகளுக்கும் செயல் வடிவம் தந்து இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு வழிகோலிய முஸ்லிம்களா பழமைவாதிகள்?

அரபுகள் கண்டறிந்த கண்டுபிடிப்புகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து, இன்றைய தொழிற்புரட்சிக்கு வழி கோலினர் மேலைநாட்டினர். இவ்வாறு இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கு - தொழிற்புரட்சிக்கு ஆதார சுருதியாயமைந்த முஸ்லிம்கள் பழமைவாதிகளா?

'எம்மதமும் சம்மதம்' - சரியா?

இதேபோல அண்மைக் காலமாக முஸ்லிம்களை நோக்கி ஒரு முழக்கம் முன் வைக்கப்படுகிறது. ‘எம்மதமும் சம்மதம்’ என்பதே அந்த முழக்கம். இஸ்லாத்தை மட்டும் ஏற்று, பின்பற்றி வாழாது எல்லாசமய நெறிமுறைகளையும் முஸ்லிம்கள் ஏற்று பின்பற்றி வாழ முற்பட வேண்டும் என்பதே இம்முழக்கத்தை முழங்குவோரின் உட்கிடக்கை. இதற்கு மாறுபாடான உணர்வை வெளிப்படுத்தினால், மதச் சகிப்புணர்வு இல்லாதவன், சமய நல்லிணக்கச் சிந்தனையற்றவன் என நம் மீது அவதூறு கூறி புழுதி வாரித் தூற்றுவதுதான் அவர்கள் நோக்கம்.

'எம்மதமும் சம்மதம்’ என்ற கோட்பாட்டை ஏற்றால் வேறுபாடுகட்கு அப்பாற்பட்ட நிலையில் செளஜன்யமாக வாழ முடியும். வேற்றுமை உணர்வே இல்லாமல் எல்லோரும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்றெல்லாம் கவர்ச்சியான விளக்கம் தரத் தவறுவதில்லை.

ஆனால், ஒருவர் ஆழ்ந்து சிந்தித்தால் இக்கோட்பாடு எவ்வளவு அபத்தமானது என்பது தெளிவாகும்.