பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

281

வாளை இனியும் தம் வசம் வைத்திருப்பது மிகக் கேடான செயலாகும். இதனால் நமக்கு நரகம்தான் கிடைக்கும் எனக் கருதி, மனச்சாட்சியின் உந்தல்படி, வாளை எடுத்து வந்து அலீ(ரலி) அவர்களிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கோரினார் யூதர். அலீ(ரலி) அவர்களின் செயல் யூதரின் மனச் சாட்சியைத் தூண்டுவதாக அமைந்தது.

நீதி, நேர்மை செம்மையாகச் செயல்பட அவரவர் மனச்சாட்சி தூண்டுதல் பெறுவதை அடித்தளமாகக் கொண்டு அமைந்துள்ளதே இஸ்லாமிய ஷரீயத் சட்டம்.

நீதியும் நேர்மையும் இஸ்லாத்தின் இரு கண்கள்

நீதியையும் நேர்மையையும் இரு கண்களாகக் கருதும் இஸ்லாம், அவரவர் பின்பற்றும் சமய அடிப்படையில் நீதி வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் விதிக்கிறது. அவ்வகையில் இஸ்லாமிய நெறி அடிப்படையில் நீதி வழங்க உருவானவையே ஷரீயத் சட்டங்கள்.

ஜஹாங்கீர் மாமன்னரின் அன்பு மனைவி நூர்ஜஹான். மிகச் சிறந்த அழகி மட்டுமல்ல, அறிவாற்றலும் செயல்திறனும் நிர்வாகத் திறமையும் நிறைவாக வாய்க்கப்பெற்றவர். ஜஹாங்கீர் ஆட்சி செய்து வந்தார் என்ற போதிலும் உண்மையாக ஆட்சியை நடத்தி வந்தவர் அவர் மனைவி நூர்ஜஹான் தான் என்று கூறினால் அஃது மிகையில்லை.

ஒரு நாள் அரண்மனைத் தோட்டத்தில் வில் வித்தை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் எய்த அம்பு வேகமாக மதில் சுவரைத் தாண்டி வெளிச் சென்றது. அப்போது அவ்வழியே சென்று கொண்டிந்த சலவைத் தொழிலாளி ஒருவர் உடலில் பாய, அவர் அங்கேயே பிணமாகச் சாய்ந்தார். இந்தக் கொலை வழக்கு சக்கரவர்த்தியின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. கொலைக் குற்றவாளியாக அவர்முன் அவரது அன்பு மனைவி நூர்ஜஹான் நிறுத்தப்பட்டார்.