பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/300

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

கொண்டுள்ளது. நான் அடிக்கடி செல்லும் பாரிசில் ஒரு புதுமையைக் கண்டு வருகிறேன். 1980 - க்குப் பிறகு உருவாகும் அரசின் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கீழ் தளத்தில் பள்ளிவாசலுக்கு என ஒரு பகுதியை ஒதுக்கியே கட்டும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு இஸ்லாம் விரைந்து பரவி வருகிறது.

வெளிப்படும் உண்மை

இதிலிருந்து பல உண்மைகள் வெளிப்படுகின்றன. இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள, தெளிவு பெற பல உள்ளங்கள் காத்திருக்கின்றன. ஆனால், அவர்கள் உள்ளம் ஏற்கும் வண்ணம் வழங்க நாம்தான் வகையில்லாமல் இருக்கிறோம். இதனால் மாற்றார் கொண்டுள்ள மாறான கருத்துகள் துடைத்தழிக்கப்படாததால் அவை தொடரவும் நேரிடுகிறது.

அமெரிக்காவில் கண்ட அதிசயம்

அண்மையில் ஒரு சுவையான சம்பவம் எனக்கு அமெரிக்காவில் ஏற்பட்டது. நான் வாஷிங்டனில் இருந்தபோது நாக்ஸ்வில் எனுமிடத்தில் 'எரிபொருள் ஆதாரங்கள்' பற்றிய பன்னாட்டுக் கண்காட்சி நடப்பதாகக் கேள்விப்பட்டு, அதைக் காண அங்கு சென்றிருந்தேன்.

அக்கண்காட்சியில் உலக நாடுகள் பலவும் பங்கேற்றிருந்தன இந்தியாவைத் தவிர. மற்ற நாடுகளின் அரங்குகளைவிட சவூதி அரேபியா நாட்டு அரங்குமுன் மிக நீண்ட 'கியூ' வெகு நேரமாக நின்றிருந்தது. அரங்கில் ஏதோ புதுமைகள் இருப்பதாகக் கருதி நானும் வரிசையில் இடம் பிடித்து நின்றேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த அமெரிக்கரிடம் பேச்சுக் கொடுத்தபோதுதான் எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. 'சவூதி அரங்கினுள் கிராண்ட் மாஸ்க்' எனும் பெயரில் காஃபாவை தத்ரூபமாக அமைத்து, அதை மையமாக வைத்து, இஸ்லாமிய நெறியையும்