பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

பிடிப்பார். அதன் பிறகும் மாட்டுக் கூடவே தொடர்ந்து ஓடியபடி, தன் காலை அதன் அடி வயிற்றில் உராயும்படி அடிக்கடி செய்வார். இது ஜல்லிக்கட்டு மாட்டுக்கு மிக இதமான உணர்வை ஊட்டும். இதனால் மாட்டின் வேகம் வெகுவாகக் குறையும். அச்சமயத்தில் அன்புணர்வு பொங்க மாட்டைத் தழுவியபடி நிற்கும் மாடுபிடியாளர் மாட்டுக் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பந்தயப் பொருள்களைக் கைப்பற்றியவராய் வெற்றி பெறுவார். இதே முறையைத் தான் இஸ்லாத்தைக் கண்டு மிரண்டு நிற்பவர்களிடத்தில் இஸ்லாமிய உண்மைத் தத்துவங்களை உணர்த்தக் கையாள வேண்டும்.

இறை தூதர்களும் இறை வேதங்களும்

எவ்வளவுதான் முஸ்லிம்கள்மீது கசப்புணர்வும் இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வும் புகட்டப்பட்டிருந் தாலும், இந்த உள்ளங்களில் 'உலகிலுள்ள அனைத்துச் சமயங்களும் சமய தீர்க்கதரிசிகளும் இறைவனால் அருளப்பட்டவர்களே; இறைதூதர்கள் பிறவாத நாடில்லை; இனமில்லை; மொழியில்லை; ஒரு சமய வேதத்தின் மூலக் கொள்கைகள் மனிதரால் மாற்றப்படும்போது, மீண்டும் மூல வடிவில் வேதமும் அதைப் போதிக்க இறைத் தூதரும் வருவதுதான் வேத வரலாறு. இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளான இறை நம்பிக்கையாகிய ஈமான், இறை வணக்கமாகிய தொழுகை, விரதமாகிய நோன்பு, ஏழையின் பங்காகிய ஜகாத், புனிதப் பயணமெனும் ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் அனைத்துச் சமயங்களிலும் இடம் பெற்றிருப்பதே இதற்குச் சான்று' என்று விளக்கும்போது இடைவெளி குறுக, ஒருவரையொருவர் நெருங்கி வர, உள்ளங்கள் ஒன்றிணையத் தொடங்கும்.

சூஃபிகளின் உத்தி

இந்த உத்தியைத்தான் முஸ்லிம் சித்தர்கள் எனும் இஸ்லாமியச் சூஃபிமார்கள் தமிழ் மக்களிடம்