பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

இந்து சமய வேத நூல்களையெல்லாம் நுணுகி ஆராய்ந்த ஜெர்மன் ஆய்வியலறிஞர் மாக்ஸ்முல்லர் இந்து சமயத்தின் அசைக்க முடியா அடிப்படை 'ஓர் இறை' தத்துவமே என்பதைத் தெளிவாகக் கண்டறிந்து கூறியுள்ளார்.

நினைந்து வணங்கினால் மோட்சம்

பழைய இந்து சமயத்தை மீண்டும் புதுப்பிக்க தென்கோடி கேரளா முதல் வடகோடி இமயம் வரை நடந்து சென்று இந்து சமயத்துக்கு புத்துயிரூட்டிய ஆதி சங்கரர் 'யாருக்கு மோட்சம் கிட்டும்' என்பதை விளக்கும்போது, "ஒரே இறைவன் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். கடவுளை நினைந்து வணங்கினால் மோட்சம் கிட்டும்” எனக் கூறியிருப்பதிலிருந்து ஒரே இறைவனை மனதால் மட்டுமே நினைந்து வணங்க முடியும் என்பதையும் அத்தகையவர்கட்கே மோட்சம் கிட்டும் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளார்.

ஓர் இறைக் கோட்பாடே 'பிரம்ம வித்தை'

இந்து தர்மத்தை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் கெளதம மகரிஷி. இவர் பிரம்ம வித்தையைக் கற்றுத் தந்த பிதாமகர் எனப் போற்றப்படுகிறார். ஆனால், இவர் 'பிரம்ம வித்தை’ என எதைக் கூறுகிறார் என்பது நினைத்தின்புறத் தக்கதாகும்.

“பல பரம்பொருள் உண்டு என்று ஒரு மதம் கூறுமானால் அது மதமல்ல; ஒரே இறைவனை வணங்குவதே பிரம்ம வித்தை"

எனக் கூறியிருப்பதிலிருந்து இஸ்லாத்தின் அடித்தள இறைக் கோட்பாட்டையே கெளதம மகரிஷியும் கூறுவதிலிருந்து அனைத்துச் சமயங்களின் அடித்தள இறைக் கொள்கை ஒன்றாகவே இருப்பதையறிந்து வியப்படைகிறோம்.