பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310

அறிவூட்டம் பெற ஆங்கிலமா- தமிழா?

நான் மூன்று முறை உலகை முழுமையாக வலம் வந்தவன். உலக மக்களின் நாடி நரம்புகளையெல்லாம் ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் ஓரளவு பிடித்துப் பார்த்திருக்கிறேன். நீங்கள் நினைப்பது போன்ற நிலை எங்குமே இல்லை. அந்தந்த நாட்டுத் தாய்மொழி தான் அந்தந்த நாட்டு மக்களுக்கு அறிவூட்டி வளர்க்கும் ஊட்டச்சத்தாக அமைந்திருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் மட்டும்தான் அறிவூட்டம் ஆங்கில மொழியில் மட்டுமே இருப்பது போன்ற மனப்பிரமை. இதற்குக் காரணம் ஆங்கில மொழி மூலம் நமக்கு ஊட்டப்பட்ட அழுத்தமான அடிமை உணர்வும் அதன் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள தாழ்வு மனப்பான்மை. இது எந்த அளவு உச்சத்தை அடைந்திருக்கிற தென்றால் பெற்ற மகனே தன் தாயைப் பார்த்து, 'நீ என்னைப் பெற்றிருந்தாலும் எனக்கு தாயாக இருக்க உனக்குத் தகுதி இல்லை. அதோ அங்கே கவுன் போட்ட வெள்ளை நிறத்தோளோடு ஒருத்தி நிற்கிறாளே அவள்தான் எனக்குத் தாயாக இருக்க முழுத் தகுதி படைத்தவள்’ எனக் கூறும் இழிநிலை இன்றையத் தமிழ்மகனுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலை வேறு எங்குமே காண முடியாத ஒன்று.

தமிழக விந்தைப் போக்கு

தமிழ் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலாவது இந்த அளவுக்கு ஆங்கிலப் பற்றாளர்கள் இருக்கிறார்களா என்பதே பெரும் கேள்விக் குறி. நான் அடிக்கடி செல்லும் ஃபிரான்சு நாட்டிலோ ஜெர்மனியிலோ, ஜப்பானிலோ, சீனாவிலோ எங்கு காண முடியா நிலை தமிழகத்தில் மட்டுமே உண்டு. இந்நாடுகள் உட்பட உலகெங்கும் தொடர்பு மொழியாக ஆங்கிலம் மட்டுமே அமைந்துள்ளது. அதுவும் மக்கள் எல்லோரும் பேசும் மொழியாக அல்ல. இங்கேயெல்லாம் குறிப்பிட்ட சில இடங்களில், சான்றாக பன்னாட்டு விமான தளம், பன்னாட்டுப் பேருந்து நிலையம், தொடர் வண்டி