பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

313


அறிவியலின் விரைவான வளர்ச்சிப் போக்குக்கு ஈடு கொடுக்கத் தமிழால் முடியுமா என்பதுதான் இன்றைய இளைய தலைமுறைக்கு முன் எழுந்துள்ள ஐயம். இதற்கு அடிப்படைக் காரணம் பெரும்பாலான குழந்தைகள் தமிழை ஒரு மொழிப் பாடமாகவும் ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகவும் கொண்டு படிக்க நேர்ந்திருப்பதுதான். நாட்டு விடுதலைக்கு முன்பும் பின்பும் இருந்ததுபோல் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகவும் தமிழை பள்ளியிறுதி வரைப் பயிற்சி மொழியாகவும் கொண்டு படித்திருந்தால் இப்படிப்பட்ட சந்தேகங்கள் எழாமலே போயிருந்திருக்கும்.

தமிழ் இயல்பிலேயே ஒரு அறிவியல் மொழி. அறிவியலைச் சொல்லுவதற்கென்றே ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட மொழி. காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப பல்வேறு வடிவெடுத்த போதிலும் தன் அடித்தள அறிவியல் திறத்தினை அது இன்னும் இழக்கவில்லை என்பதுதான் உண்மை நிலை. இதை மொழியியல் வரலாற்று அடிப்படையில் மட்டுமல்ல, பல்லாயிரம் அறிவியல் கலைச்சொற்களை உருவாக்கி ஐந்து தொகுதிகளை வெளியிட்டபின் எனக்கு எழும் அழுத்தமான உணர்வு. இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலத்தைவிட சொற்செட்டோடும் பொருட்செறிவோடும் இலக்கிய மெருகோடும் தமிழில் அறிவியலைச் சொல்ல முடியும். அந்த அளவுக்குத் தமிழ் உயிர்ப்புள்ள அறிவியல் மொழி.

என்னைப் பொருத்தவரை தமிழை ஒரு மொழியாக மட்டுமே பார்க்கிறேன். உங்கள் கருத்தையும் உணர்வையும் என்கருத்தையும் உணர்வையும் ஒருவருக்கொருவர் பரிமாறக் கிடைத்த கருவியே மொழி. அதற்கு மேல் அதில் எதுவுமில்லை.

இன்று தமிழ் வளர்ச்சிக்குத் தடைக் கற்களாக இருப்பவர்கள் வெறும் பற்றாளர்களும் பூஜா மனப்பான்மை