பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புதிய சித்தாந்தக் குழப்பம்

கடந்த இருபது நாட்களாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற மீலாது விழாக் கூட்டங்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களோடு சேர்ந்து வள்ளல் நபியவர்களின் வாழ்வையும் வாக்கையும் நினைவுகூரவும் திருமறையின் அடிப்படையில் சிந்திக்கவும் அரிய வாய்ப்பைப் பெற்றேன். இங்கு வருவதற்கு முன்பு இன்றைய காலப் போக்குக்கேற்ப அறிவியல் அடிப்படையில் நாம் எடுத்து வைக்கும் கருத்துகளுக்கு எத்தகைய எதிரொலி இருக்குமோ என்ற அச்சத்தோடவேதான் வந்தேன். என்னைவிடவும் உரக்க சிந்திக்கத் தெரிந்தவர்கள் நாங்கள் என்பதை என் சிந்தனைகளை நீங்கள் ஆர்வத்தோடு ஏற்கும் பாங்கினைக் கொண்டே அறிந்து, புரிந்து கொண்டேன்.

விரைவான சிந்தனைப் பரிமாற்றம்

இன்றைய கால கட்டம் செய்தித் தொடர்புச் சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சியின் விளைவாக தகவல் பரிமாற்றம் வியக்குமளவுக்கு விரைந்து நடைபெற்று வருகிறது. அதைப் போன்றே சிந்தனைப் பரிமாற்றமும் அதனை வெளிப்படுத்தும் முறைகளும் கூட புதுமையான போக்கிலே அமைந்து வருவதைக் காண்கிறோம்.