பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

319



காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப, பழைய முறையில் அல்லாது புதுப்போக்கில் நம் உணர்வுகளும் சிந்தனைகளும் பரிமளிக்க வேண்டுவது ஒருவகைக் காலக் கட்டாயம் என்று கூட கூறலாம்.

ஆன்மீக - அறிவியல் கூட்டிணைவு

பலரும் எண்ணுவதுபோல் இஸ்லாம் மற்றைய சமயங்களைப் போன்ற ஒன்றல்ல; ஆன்மீகத்தையும் அறிவியலையும் இரு கண்களாகக் கொண்ட அற்புதமான சமுதாய சீர்திருத்த இயக்கம். இன்றைக்கு அதில் அமைந்துள்ள அறிவியல் கருத்துகளெல்லாம் மக்கள் மத்தியில் முனைப்புடன் பரப்பப்பட வேண்டியவை. இஸ்லாமியக் கருத்துகளைப் பரப்புகின்ற பணியில் நாம் இன்னும் பழைய பாணியிலேயே போய்க் கொண்டிருக்கிறோம்.

ஆன்மீகம் என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதே போன்று அறிவியலும் மிகப் பெரும் அடிப்படைத் தேவையாய் அமைந்துள்ளது. அகவாழ்வுக்கு ஆன்மீகமும் புறவாழ்வுக்கு அறிவியலும் இன்றியமையாத் தேவைகளாக அமைந்துள்ளன.

முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) தொடங்கிய இஸ்லாமிய நெறியை, நிறைவுசெய்த நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மூலம் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி வேதமாகிய திருக்குர்ஆனில் நேற்றைய நிலையும் இன்றைய போக்கும் நாளை மலரப் போகும் மனித குல வாழ்வு பற்றிய வருநாளியல் (Futurology) கருத்துகளும் பொதியப்பட்டுள்ளன. இச் செய்திகளெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துக்கூற வேண்டியது காலத்தின் இன்றியமையாத் தேவையாயுள்ளது. அப்போதுதான் நம்மைப் பற்றிய சரியான கணிப்பு மக்கள் மத்தியில் உருவாகி நிலை பெற முடியும்.