பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தட்டைதான்" என்று கூறிய கையோடு, இந்தப் பொய்யைச் சொல்வதற்காக இந்தக் கோர்ட்டுக்கு நான் வந்திருக்கிறேன். இப்பவும் சொல்கிறேன், 'உலகம் உருண்டைதான்' என்று முணுமுணுத்துக் கொண்டே கீழே இறங்கினார்.

ஏனென்றால் பெரியவர்களால், அறிவாளிகளால், உண்மையைக் கண்டறியும் விஞ்ஞானிகளால் தாங்கள் கடும் ஆராய்ச்சி செய்து கண்டறியும் உண்மைக் கண்டுபிடிப்புகளை மறைத்துப் பேசவே முடியாது. ஏன்? அந்த அரிய உண்மையைக் கண்டறிவதற்காக அவர் எவ்வளவு காலத்தை - சக்தியை - பொருளை, செலவு செய்திருப்பார். இத்தனைக்கும் பிறகு இந்த உண்மையைக் கண்டறிந்த பிறகு எவரோ ஒருவர் சமயக்கருத்தைக் காரணம் காட்டி, 'மதக் கட்டுப்பாட்டுக்காகக் கண்டறிந்த உண்மையை வெளிப்படுத்தாதே' என எவ்வளவுதான் வற்புறுத்திய போதிலும் ஏதோ ஒப்புக்காக மாற்றம் சொல்ல உதட்டளவால் முயல்வாரே தவிர உள்ளத்தளவில் அவர் மறுத்துரைக்க மாட்டார். அப்படித்தான் முதிய வயது விஞ்ஞானி கலீலியோ கோர்ட்டில் உண்மைக்குப் புறம்பாகக் கூறியதையும் உண்மையை சற்று உரக்கவே முணுமுணுத்துக் கூறியதையும் அக்கால வழக்கப்படி ரோமர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் மதத்தின் பெயரால் விஞ்ஞானிகளைக் கொடுமைப்படுத்தினார்கள். இதனால் அந்த மதத்திற்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு உண்மைகளுக்கும் இடையே ஏற்பட்டு வந்த இடைவெளி இட்டு நிரப்பப்படாமலே, நிரப்புவதற்கான வழியே இல்லாமல் போய்விட்டது.

அறிவியல் வளர வழிகாட்டும் அல்குர்ஆன்

அதே சமயத்தில் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குர்ஆனுக்கும் அறிவியலுக்குமிடையே மிகப் பெரும் நெருக்கம் உள்ளது. அது மட்டுமல்ல திருமறை அறிவியலை