பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

பெற்றுச் சென்றான். அவர் காரைக் கிளப்பினார். கடைப்பையன் சாமானைக் கொண்டு வந்ததிலிருந்து அவன் பணத்தைப் பெற்றுச் செல்லும் வரை அவர் அருகில் உட்கார்ந்திருந்த அவர் மனைவி அவரிடம் எதையோ சொல்வதற்குப் பலமுறை முயன்றார். அவர் அதைக் கவனிக்கவில்லை. பின் அப்பெண்மணி வாய் திறந்து கேட்டே விட்டார். "ஏங்க! சாமானும் பில்லும் சரியா இருக்கான்னு பார்க்க வேண்டாமோ?" வினாத்தொடுத்த மனைவியை வெறித்துப் பார்த்தார். "சாயபு கடையிலே சாமான் வாங்கினா சந்தேகப்படக் கூடாது. அவங்க ஆண்டவனுக்கு ரொம்பப் பயந்தவங்க. அஞ்சு நேரம் நமாஸ் பண்றவங்க. வியாபாரத்திலே மோசம் செய்தா நேரா நரகம்தான்'னு நம்புறவங்க" என்று அவர் கூறியபோது எனக்குப் புல்லரித்து விட்டது. தொழுகை மூலம் ஒரு முஸ்லிம் பெறுகின்ற இறையச்ச உணர்வு அவனை எவ்வளவு தூயவனாக, நேர்மையாளனாக உலக மக்களுக்கு இனங்காட்டிக் கொண்டிருக்கிறது. தொழுகையாளி தவறு செய்ய மாட்டான் என்ற எண்ணத்தை உளவியல் ரீதியாக மற்றவர்கள் மத்தியில் எவ்வளவு அழுத்தமான நம்பிக்கையைத் தோற்று வித்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

இவ்வாறு நாம் மேற்கொள்ளும் மார்க்கக் கடமைகள் ஒவ்வொன்றுமே இறையச்ச உணர்வூட்டும் செயல்பாடுகளாகவே அமைந்திருப்பதைக் காணலாம். அதுமட்டுமல்ல, அவை ஆன்மீக உணர்வோட்டத்தையும் அறிவியல் அடிப்படையையும் கொண்டுள்ளன என்பதுதான் உண்மை. பெருமானார் (சல்) அவர்களின் வாழ்வும் வாக்குமே இதை உணர்த்துவதாக உள்ளதை நம்மால் அறிந்தின்புற முடிகிறது. இந்தச் சமயத்தில் அண்ணலார் வாழ்வில், அவர் கூறிய ஒரு வாக்கில் எவ்வளவு அரிய, பெரிய விஞ்ஞான உண்மை பொதிந்துள்ளது என்பதை எண்ணும் தோறும் மயிர்க்கூச்செரிகிறது.