பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

டிருப்பவன் என்ற அடிப்படையில் ஒரு கருத்தை மிக உரமாக உங்களிடம் சொல்ல முடியும். அதுதான் திருமறையான திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள பல செய்திகளுக்கு விளக்கம் தரும் முறையிலேயே இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன என்ற கருத்தே அது.

திருமறை ஆயத்துகள் ஒவ்வொன்றுமே நம்மை அறிவியல் உணர்வும் சிந்தனையும் கொண்டிருக்கப் பணிக்கின்றன. இதைத் திருமறையிலுள்ள இறை வசனங்கள் முழுமையும் காண முடிகிறது.

மனிதத் தேவையும் பிற உயிர்த் தேவையும்

சாதாரணமாக ஒரு கணம் எண்ணிப் பாருங்கள், மனிதத் தேவைக்கும் பிற உயிர்களின் தேவைக்குமுள்ள வேறுபாட்டை ஆராய்ந்து பார்த்தாலே, இறைவன் அறிவியல் ஆராய்ச்சியில் முனனப்புடன் ஈடுபட, பயன்களை அனுபவிக்கப் பணித்திருப்பதை ஒருவாறு உணர்ந்து தெளிய முடியும்.

மனிதனைத் தவிர்த்துள்ள பிற உயிரினங்களின் தேவைகள், குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டவை. மிக மிகக் குறைந்த அளவுடன் அமைந்திருப்பவை. ஒரு மாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதுக்கு வேண்டிய தேவை மிகச் சில. அத்தேவைகளும் அதன் கண்ணுக்கு முன்னாலேயே காணும் வகையில் அமைந்துள்ளன. தன் கண் முன்னே காணும் புல்லை மேய்கிறது. அருகில் இருக்கும் குட்டையில் நீர் குடிக்கிறது. தாகம் தீர்ந்தவுடன் அருகில் உள்ள மர நிழலில் படுத்து ஓய்வெடுக்கின்றது. அசைபோட்டு உண்டதை ஜீரணிக்கிறது. தன் இணையைக் காணும் போது உடலுறவுக் கொண்டு தன் இனவிருத்திக் கடமையை நிறைவேற்றிக் கொள்கிறது. இதற்கு மேல் அதற்கு எந்தத் தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை . இதே போலத்தான் பறவை இனங்கள், வீட்டு விலங்குகளி