பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

எப்படி? எதற்காக? கூறியுள்ளார் என்று பல கேள்விக் குறிகளோடு ஆராய்கிறபோதுதான் பெருமானார் கூறியதன் பொருள் நுட்பம் நமக்குத் தெளிவாய் புலப்பட முடியும்.

கல்வியறிவு பெற சீனாவுக்கு ஏன் செல்லப் பணிக்கிறார். கல்வி எங்கிருந்தாலும் அதைப் பெற எவ்வளவு கஷ்டம் ஏற்பட்டாலும், துன்பம் தொடர்ந்தாலும் கல்வியைத் தொடர்ந்து பெற முயல வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு கூறியிருப்பாரா? அல்லது நீண்ட நெடுந்தொலைவுக்கப்பால் உள்ள சீனாவுக்கு பல மலைகளை, பாலைவனங்களை, காடு வனாந்தரங்களை, ஆறுகளை, கடல்களையெல்லாம் கடந்து சென்றாவது கல்வியைப் பெற முயல வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக இவ்வாறு கூறியிருப்பாரா?

நல்ல கல்வி என்றால் அதைப் பெற உலகின் நாகரிகத் தொட்டிலாக அன்று புகழ்பெற்று விளங்கிய எகிப்து நாட்டுக்குச் செல்லப் பணித்திருக்கலாமே? தத்துவச் சுரங்கமாக விளங்கிய கிரேக்க நாட்டிற்குப் போகச் சொல்லியிருக்கலாமே? தவ்ஹீதின் பிறப்பிடமாக, ஏகத்துவத்தின் தாயகமாக பெருமானாரால் போற்றிப் புகழப்பட்ட இந்தியாவிற்குச் சென்று கல்வி கற்க அறிவுறுத்தியிருக்கலாமே? இங்கேயெல்லாம் இல்லாத அப்படி என்ன சிறப்புக் கல்வி சீனாவில் இருந்தது?

இந்தக் கண்ணோட்டத்துடன் சீனாவின் அன்றைய நிலையை வரலாற்றுப் பூர்வமாக ஆராய்கிறபோதுதான் பெருமானார் (சல்) அவர்கள் சீனா செல்ல வற்புறுத்திக் கூறியதன் பொருள் நுட்பம் நமக்குத் தெளிவாகப் புரியத் தொடங்குகிறது.

ஆய்வுத் தொட்டிலாய் மலர்ந்த அன்றைய சீனா

பெருமானார் (சல்) அவர்கள் இக்கருத்தைக் கூறிய அதே காலகட்டத்தில் சீனாவின் நிலை, குறிப்பாக அங்கு