பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அறிவு வளர்ச்சி - ஆராய்ச்சி நிலை எவ்வாறு இருந்தது என்பதை வரலாற்று அடிப்படையில் - அறிவியல் ஆய்வு வளர்ச்சியின் அடிப்படையில் பார்க்கின்ற போது அன்று அங்கிருந்த நிலை கண்டு நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

'சீர் கல்வி' பெற ஏன் சீனாவைத் தேர்ந்தெடுத்தார்? என்பதும் தெளிவாகிறது. அண்ணலார் கூறிய அன்றைய கால கட்டத்தில் எத்தனை விதமான விஞ்ஞான ஆராய்ச்சிகள் உண்டோ அவ்வளவு ஆராய்ச்சிகளும் மும்முரமாக சீன நாட்டிலே நடந்து கொண்டிருந்த நேரம். அச்சுப் பாளமுறை அப்போதுதான் அங்கே கண்டறியப்பட்டிருந்தது. எழுதுகிற தாள் அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அச்சடிப்புக்குப் பயன்படுகிற மையையும் தாளில் எழுதுவதற்கான மையையும் மசி கொண்டு எழுதும் எழுதுகோலையும் கண்டறிந்திருந்தார்கள். அறியப்பட்டிருந்த அத்தனை நோய்களுக்கும் நிவாரணமளிக்கக்கூடிய மூலிகைகளும் அவற்றால் பலவிதமான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்த கால கட்டம். உடம்பில் ஓடும் நாடி நரம்புகளில் எந்த இடத்தில் ஊசி குத்தினால் எந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்பதையெல்லாம் உள்ளடக்கிய 'ஊசி குத்து' மருத்துவ முறையான 'அக்குப்பஞ்ச்சர்' முறை அறியப்பட்டிருந்த கால கட்டம். பட்டுப் பூச்சியின் உடலிலிருந்து கசிந்து வெளிவரும் ஒருவகை திரவத்திலிருந்து உருவாகும் பட்டு நூலைக் கொண்டு அழகான ஆடை நெய்யும் முறை செயலாக்கப்பட்டிருந்த கால கட்டம் அது. சுருங்கச் சொல்வதென்றால் அறிவு வளர்ச்சி - ஆராய்ச்சி முயற்சி - அவற்றின் அடிப்படையிலான அறிவியல் கல்வி வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது அன்றைய சீனத்தில். இத்தகைய அறிவியல் ஆராய்ச்சிக் கல்வியை - விஞ்ஞானக் கண்டு பிடிப்பு முயற்சிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையை ஊட்டுகின்ற முறையிலேயே சீனாவுக்குச்