பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அமைந்துள்ளன. அல்கோரிதம் என்ற கணிதவியல் 'அல்-குவாரிஸ்மி' எனும் கணித மேதையின் பெயர் அடிப்படையில் அமைந்ததாகும். 'அல்ஜீப்ரா' எனும் கணிதவியல் 'அல் -ஜாபர்' என்ற அறிஞரின் பெயர் திரிபாகும். அதே போன்று திரிகோணமிதி என்ற கணிதவியல் பிரிவையும் 'ஜாமெட்ரி' எனும் கணிதவியல் பிரிவையும் உருவாக்கி வளர்த்து வளப்படுத்தியவர் நஸ்ருத்தீன் எனும் கணிதவியல் வல்லுநராவார். யூக்ளிடின் கணிதவியல் அடிப்படைக் கோட்பாடுகளை அடியொற்றி, 'வடிவ கணித'க் கோட்பாடுகளை உருவாக்கியவர் உமர்கையாம் எனும் சூஃபிக் கவிஞர் என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்றே.

இன்றைய வளர்ச்சிக்கு அன்றே அடிப்படை

கணிதவியல் வளர்ச்சி, எந்திரவியல் வளர்ச்சிக்கு ஆதார சுருதியாக அமைந்தது. இயக்கம், ஈர்ப்பாற்றல், சக்தி, ஒளி, வெற்றிடம், ஒளியின் வேகம் முதலான அனைத்து அறிவியல் நுட்பங்களை விஞ்ஞான பூர்வமாகக் கண்டறிந்து உலகுக்குணர்த்தியவர்கள் இஸ்லாமிய விஞ்ஞானிகளேயாவர் என்பதை அறிவியல் வரலாறு என்ற நூலில் சார்ட்டன் என்பவர் தெளிவாக விளக்கியுள்ளார். நீர்ச்சுழல் எந்திரக் கருவி, காற்று எந்திரக் கருவி, இருசு, நெம்புகோல், கப்பித்தான், ஊசலாடும் பெண்டுலம், நீர்க்கடிகாரம் போன்ற எந்திரவியல் நுட்பங்களையெல்லாம் கண்டறிந்தவர்கள் முஸ்லிம்களே.

உலகம் உருண்டை என்பதை கோப்பர்நிக்கசுக்கும் கலீலியோவுக்கும் முன்னதாகக் கண்டறிந்து கூறியவர் அல்-பிரூனியே ஆவார். சந்திரனின் இயக்கத்தைக் கண்டறிந்து கூறியவர் அலி இப்னு அமாஜுர் என்பவரும் அபுல் ஹஸன் என்பவருமே ஆவர். முதன் முதல் வானவியல் ஆராய்ச்சிக் கூடத்தை கி.பி. 772-ல் நிறுவிய பெருமை இப்ராஹீம் அல் - பஸாரியையே சாரும். அதே