பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

ஏழு வானங்களையும் நாமே படைத்திருக்கிறோம். அவை ஒவ்வொன்றிலும் உங்களைப் போன்ற எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன;' (23:17)

"ஏழு வானங்களையும் அடுக்கடுக்காக எவ்வாறு அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? அவனே அவைகளில் சந்திரனை (பிரதிபலிக்கும்) வெளிச்சமாகவும் சூரியனை ஒரு (சுய வெளிச்ச முண்டாக்கிக் கொள்ளும்) மணியாகவும் (சிராஜ்) அமைத்தான்" (71:19,16).

"உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்." (78:12) என்றெல்லாம் 24 இடங்களில் ஏழு வானம் பற்றி திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. இதிலும்கூட 'ஏழு' என்பது 'பல' என்ற பொருளிலேயே அமைந்துள்ளதாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு, திருக்குர்ஆனில் கூறப்படும் செய்திகள், அறிவியல் தகவல்களையே இன்னும் ஆய்வுலகால் முழுமையாக ஆராய்ந்தறியப்படவில்லை, அதற்கான காலக்கனிவோ ஆராய்ச்சி முதிர்வோ இன்னும் ஏற்படவில்லை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கதாகும்.

உலகம் பிறந்தது எப்படி?

இன்னும் ஒரு விந்தைமிருந்த விஞ்ஞான உண்மையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்த வான மண்டலத்தில் சூரியன், சந்திரன், பூமி முதலாகப் பல்வேறு நட்சத்திரங்களும் கிரகங்கள் என்றழைக்கப்படும் கோள்களுமாக நிரம்பியுள்ளன. சூரியன் முதலாகவுள்ள நட்சத்திரக் கூட்டங்கள் சுய ஒளி கொண்டவை; பூமி, சந்திரன் முதலான கோள்கள் சூரியனின் ஒளியைப் பெற்று பிரதிபலிப்பவைகளாகும்.