பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

77

எவ்வளவு முக்கியமோ அதுபோல் எனக்கு என் சமுதாயம் முக்கியம். அந்தச் சமுதாயம் விழிப்புடன் இருப்பதற்கான உணர்வுகளையும் சிந்தனைகளையும் அவர்களிடத்தில் உருவாக்கி வளர்க்க வேண்டுமே என்ற எண்ணத்தில் இஸ்லாமியப் பணிகளை, இஸ்லாமிய இலக்கியப் பணிகளை ஆற்றி வருகிறேன். மற்றொன்று, தாய்மொழியான தமிழுக்கு, தமிழ் இலக்கியத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை, கடமைகளை முனைப்புடன் ஆற்றி வருகிறேன். நான் இதுவரை எழுதியுள்ள நூல்களை ஆற்றிவரும் பணிகளை, இந்த இரண்டு பிரிவுகளுக்குள் மட்டுமே அடக்க முடியும்.

ஆன்மீகமும் அறிவியலும் இரு கண்கள்

சிலர் என்னிடத்தில் அவ்வப்போது ஒரு கேள்வியை எழுப்புவதுண்டு. "நீங்கள் உங்கள் மார்க்க நூல்களில், இஸ்லாமிய இலக்கியங்களில் மிகுந்த கவனம் செலுத்தும் அதே சமயம் அறிவியல் தமிழ் வளர்ச்சியிலும் அதி தீவிர கவனம் செலுத்துகிறீர்களே?" என்பதுதான் அவர்கள் வியந்து கேட்கும் கேள்வி. அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை இஸ்லாம் என்பதுவும் அறிவியல் என்பதுவும் ஒன்றுதான். ஒரு மனிதனுக்கு இரண்டு கண்கள் இருப்பதைப் போல இஸ்லாத்தில் ஆன்மீகமும் அறிவியலும் அமைந்துள்ளன. இரண்டும் வெவ்வேறானவைகளோ. அல்லது ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளோ அல்ல. இரண்டுமே இறை நோக்கத்தை இனிது நிறைவேற்ற ஒருங்கமைந்தவைகளாகும். இரண்டு கண்களும் ஒரே சமயத்தில் சரியான கோணத்தில் பார்த்தால்தான் எதையும் தெளிவாகப் பார்க்கவும் பார்த்ததை தெளிவாக அறியவும் இயலும். அந்த முறையிலேயே நான் ஆன்மீகம், அறிவியல் ஆகிய இவ்விரண்டு பணிகளையும் ஒருசேர ஆற்றி வருகின்றேன்.